Add your post

ஏன் இந்த சரணாகதி? By மாலன் ________________________________________ ஊருக்கு நடுவே ஒரு நதி. பரந்து கிடக்கும் பசும் வயல்கள். சுற்றிலும் குளங்கள். தொலைவில் முகில்கள் உரசிச் செல்லும் மலை முகடுகள். ஊரில் ஒன்பது நிலைகளோடு நெடிதுயர்ந்து நிற்கும் ஒரு பழங்காலச் சிவன் கோயில். அதிலொரு மணி மண்டபம். கல்லெடுத்து அதன் தூண்களில் தட்டினால் இசை உதிரும் அழகான ஊர்தான் களக்காடு. தீட்டிய திலகம் கலைந்ததைப் போல அதன் வரலாற்றில் சிறிது ரத்தக் கறையும் உண்டு. அங்கு தலித்களின் குடிசைகளுக்கு அருகில் விரிந்து கிடந்த வயல்களில் பயிர் வேலை செய்து கொண்டிருந்தான் ஒரு கரிய இளைஞன்; 21 வயதிருக்கும். களை பறித்து நிமிர்ந்த போது கண் எதிரே காவல்துறை வந்து நின்றது. எதிர்பார்த்ததுதான்; எனவே, பதற்றமடையவில்லை. தன்னுடைய தலைமறைவு வாழ்க்கை முடிவுக்கு வருகிறது; அது இனிச் சிறை வாழ்க்கையாகத் தொடரும் என அந்தக் கம்யூனிஸ்ட்டுக்குத் தெரியும். ஆனால், எதிர்பாராதது சித்திரவதை. அள்ளிக் கொண்டு போன காவலர்கள், காவல் நிலையத்தில் அவரைத் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டார்கள். மீசை முடிகளை ஒவ்வொன்றாக ரத்தம் கசியக் கசியப் பிய்த்தெறிந்தார்கள். காரணம்? தேடப்பட்டு வந்த தனது சகாக்களைக் காட்டிக் கொடுக்க மறுத்ததுதான். அந்த இளைஞன் அப்பழுக்கற்ற அரசியல்வாதி என்று இன்று எல்லோராலும் கொண்டாடப்படும் ஆர்.நல்லக்கண்ணு. அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பியதற்காக சுதந்திர இந்தியாவில் (1952) தண்டிக்கப்பட்டவர்களில் ஒருவர். அரசால் புனையப்பட்ட திருநெல்வேலி சதி வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர். வசீகரமான சத்தியங்களோடு மக்கள் நலக் கூட்டணி உருவானபோது அதன் முதல்வர் வேட்பாளராக நல்லக்கண்ணு அறிவிக்கப்பட வேண்டும் என அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆவல் தொனிக்கும் முணுமுணுப்புகள் முளைத்தன. ஆனால், "முதல்வர் வேட்பாளர் என ஒருவரை அறிவிக்கும் நடைமுறையை நாங்கள் ஏற்கவில்லை. தேர்தல் முடிந்து சட்டப் பேரவை உறுப்பினர்கள் அதை முடிவு செய்வார்கள்' எனக் கூட்டணியின் தலைமை அறிவித்ததும், அதுவும் சரிதானே என்று அந்தக் குரல்கள் அடங்கிப் போயின. ஆனால் சில வாரங்களுக்குப் பிறகு, நடிகராகத் தொழில் செய்து, திரையில் பயங்கரவாதிகளைப் பந்தாடி, புள்ளிவிவரங்களால் தன் புலமையை வெளிப்படுத்திய விஜயகாந்த் எங்கள் முதல்வர் வேட்பாளர் என அந்தக் கூட்டணி பிரகடனப்படுத்தியது. தங்கள் கூட்டணியின் பெயரோடு அந்த நட்சத்திரத்தின் பெயரையும் பிணைத்துக் கொண்டது. அந்தக் கூட்டணி ஏற்கெனவே ஒரு வரைவுச் செயல்திட்டத்தை அறிவித்திருந்தது. அதை நட்சத்திரத் தலைவர் ஏற்றுக் கொண்டதாக ஏதும் அறிவிப்பு வரவில்லை. அவர் ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தார். அது பல துறைகளில் தனியார்மயத்தை வரவேற்றிருந்தது. அதை இடதுசாரிகள் ஆட்சேபித்ததாகத் தகவல் ஏதும் இல்லை. தனது வரலாற்றுப் பெருமை, தத்துவம் சார்ந்த எளிமையான அரசியல் நடைமுறை, லட்சியங்கள், கொள்கைகள் எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு இடதுசாரிகள் விஜயகாந்த் கட்சியோடு கூட்டணி அமைத்துக் கொள்ள ஆர்வம் கொண்டதன் பின்னுள்ள ரகசியம் என்ன? திராவிடக் கடசிகளுக்கான மாற்று அரசியல் என்று அவர்கள் சொன்ன போதிலும் இப்படி ஒரு கூட்டணி உருவானதற்கான அடிப்படைக் காரணம் என்ன? உண்மையான நோக்கம் ஆட்சியைப் பிடிப்பதல்ல, கட்சியைக் காப்பாற்றுவது. அரசியல் கட்சிகளைப் பதிவு செய்து கொள்வதற்கும், தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் என அங்கீகரிப்பதற்கும் அவற்றுக்குச் சின்னங்களை ஒதுக்குவதற்கும் சில விதிமுறைகளை வகுத்து தேர்தல் ஆணையம் 1968-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி ஓர் ஆணை வெளியிட்டது. 1997-ஆம் ஆண்டு அந்த ஆணையில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. தற்போதுள்ள ஆணை கட்சிகளுக்கு அங்கீகாரம் அளிக்க, அளிக்கப்பட்ட அங்கீகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள, சில விதிகளை வகுத்துள்ளது. ஒரு கட்சி தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்பட குறைந்தது நான்கு மாநிலங்களில் ஆறு சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். அத்துடன், மக்களவையில் குறைந்தது நான்கு இடங்களையாவது பெற்றிருக்க வேண்டும். இந்த இரண்டும் இல்லாவிட்டால், தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்பட இன்னொரு வழியும் உண்டு. மக்களவையில் 11 இடங்களைப் பெற்ற கட்சி (மக்களவையில் உள்ள மொத்த இடங்களில் 2%) தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்படும். ஆனால், அந்தப் 11 இடங்கள் குறைந்தது மூன்று மாநிலங்களிலிருந்தாவது பெறப்பட்டிருக்க வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்களவையில் 9 எம்.பி.கள் இருக்கிறார்கள் (கேரளத்திலிருந்து 5, திரிபுராவிலிருந்து 2, மேற்கு வங்கத்திலிருந்து 2) அதாவது மூன்று மாநிலங்களிலிருந்து அது எம்.பி.களைப் பெற்றிருந்தாலும் 11 எம்.பி.களைப் பெறவில்லை. சரி, நான்கு மாநிலங்களில் 6 சதவீத வாக்குகளையாவது அது பெற்றிருக்கிறதா? 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு வங்கத்தில் பெற்ற வாக்குகள் 30.08%, கேரளத்தில் 28.18%. சரி, இரண்டு மாநிலங்கள் ஆயிற்று. இன்னும் இரண்டு? அங்குதான் சிக்கல். 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் அது தமிழ்நாட்டில் பெற்ற வாக்குகள் 2.4% (அதாவது 6 சதவீதத்திற்கும் கீழ்). 2011-க்குப் பிறகு 2014-ஆம் ஆண்டு தெலங்கானா, மகாராஷ்ட்டிரம், ஒடிஸா, ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றன. அந்த மாநிலங்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளையே அது பெற்றது. எனவே, வாக்கு சதவீதத்தின் படியும் மார்க்சிஸ்ட் கட்சி தேசியக் கட்சி என அங்கீகரிக்கப்படத் தகுதி பெறவில்லை. இந்தத் தேர்தலில் அது கேரளத்திலோ, மேற்கு வங்கத்திலோ எத்தனை சதவீத வாக்குகள் பெற்றாலும் மேலும் இரு மாநிலங்களில் 6 சதவீத வாக்குகளைப் பெற்றால்தான் அது தேசியக் கட்சி என்ற அங்கீகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். அந்த வகையில், இந்தத் தேர்தல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முக்கியமானது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை இதைவிட மோசம். அது 2011 தேர்தலில் கேரளத்தில் 8.72% வாக்குகளையும், மேற்கு வங்கத்தில் 1.84%, தமிழ்நாட்டில் 1.97% வாக்குகளையும் பெற்றது. மக்களவையில் கேரளத்திலிருந்து ஒரே ஒருவர் எம்.பி.யாக உள்ளார். ஒரு கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமானால் அந்த மாநிலத்திற்கு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலிலோ, மக்களவைத் தேர்தலிலோ 6 சதவீத வாக்குகளையும், குறைந்தது 2 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஒருவேளை, 6 சதவீத வாக்குகளைப் பெறவில்லை என்றாலும், குறைந்தது 3 சதவீத வாக்குகளையும் 3 இடங்களையும் பெற்றிருந்தால் மாநிலக் கட்சி என்ற அங்கீகாரம் கிடைக்கும். 2011 தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடவில்லை. எனவே, சட்டப் பேரவையில் உறுப்பினர்கள் இல்லை. வாக்கு சதவீதம் பற்றிய பேச்சே இல்லை. 2014 மக்களவைத் தேர்தலிலும் அது போதுமான வாக்கு சதவீதத்தைப் பெறவில்லை. எனவே அங்கீகாரம் என்ற நோக்கில், அதற்கும் இந்தத் தேர்தல் முக்கியமானது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலையும் இதைப் போன்றதுதான். 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. 1.5% வாக்குகளைப் பெற்றது. 2014 மக்களவைத் தேர்தலிலும் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. இடதுசாரிகளுக்கும், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கும் அங்கீகாரம் என்ற கோணத்தில் இந்தத் தேர்தல் முக்கியமானது. பெரிய கட்சிகளோடு கூட்டணி வைத்துக் கொண்டால், அந்தக் கட்சிகள் ஒற்றை இலக்கத்தில், அதிகம் போனால் 20, 25 இடங்கள் மட்டுமே இந்தக் கட்சிகளுக்கு ஒதுக்குகின்றன. அவற்றைக் கொண்டு அங்கீகாரத்திற்குத் தேவையான வாக்கு சதவீதத்தைப் பெற முடியவில்லை. தனித்துப் போட்டியிட்டால் அதிக இடங்களில் போட்டியிட முடியும். வெற்றி பெறாவிட்டாலும் வாக்கு சதவீதங்களை உயர்த்திக் கொள்ளலாம். போட்டியிட அதிகம் பேருக்கு வாக்களிப்பதன் மூலம் கட்சியிலும் பலரை திருப்திப்படுத்தலாம். இந்த நோக்கில்தான் மக்கள் நலக் கூட்டணி உருவாகியிருக்க வேண்டும். ஆனால், கடந்த காலத் தேர்தல் அனுபவங்களின் அடிப்படையில், இந்த நான்கு கட்சிகளோடு இன்னொரு வாக்கு வளம் கொண்ட கட்சியும் தேவை என்பதை அவர்கள் உணர்ந்திருக்கக் கூடும். அந்தப் பதற்றத்தின் காரணமாகவே அவை தங்கள் லட்சியங்களையும், பெருமைகளையும் தாற்காலிகமாக மூட்டை கட்டி வைத்து விட்டு நட்சத்திரத் தலைவரைத் தங்கள் அணித் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். உயிராசை எல்லோருக்கும் இயல்பே அல்லவா

புஸ்வாணமான அதிர்வேட்டு! மாலன் மதுரையில் வசித்தவர்களுக்குத் தெரியும். அம்மனும் சுவாமியும், அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் நகர்வலம் வரும் முன், ஓரடி உயரமுள்ள கள்ளிப் பலகைகளால் செய்த டயர் வண்டி ஒன்று வரும். அதிலிருந்து எதையோ எடுத்துப் பற்ற வைப்பார்கள். வெடி ஒன்று உரத்து வெடித்து ஊரையே அதிர வைக்கும். அந்த அதிர் வேட்டுக்குப் பின்னர்தான் மேளம், யானை, கொடி, குடை. எல்லாம். அநேகமாகத் தமிழகத்தின் கோயில் நகரங்களில் எல்லாம் இதுதான் வழக்கம் தமிழகத்தில் தேர்தல் ஊர்வலம் தெருவிற்கு வரும் முன், அதிர் வேட்டுப் போடும் வேலை பத்திரிகைகளுக்கு. அவை பற்றவைப்பதில் சில புஸ்வாணமாகப் புகைந்து அவிந்துவிடுவதும் உண்டு. சில வண்ணக் கோலங்களை வானில் இறைத்துவிட்டு சாம்பலாய் உதிர்ந்து சரிந்து விடுவதுமுண்டு. ஊசிப்பட்டாசாய் ஒரு சில வெடிக்கும் என்றாலும் அதிர்வேட்டுகள்தான் அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்யும் அப்படித் திரும்பிப் பார்க்கச் செய்த அதிர்வேட்டு ஒன்று நேற்று புஸ்வாணமாகப் புகைந்து விட்டது . அது திமுக-பாஜக கூட்டணி ஒன்று உருவாகும் என்று ஊடகங்கள் பரப்பிய என்ற ஊகம். அன்பர் தினத்திற்கு ஒரு நாள் முன்னதாகவே காங்கிரஸ் –திமுக கூட்டணி பற்றிய அறிவிப்பு வந்து விட்டது தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசையின் மகன் திருமணம் வரும் 17ஆம் தேதி சென்னையில் நடக்கவிருக்கிறது. கட்சியின் தலைவர் அமித்ஷா அதில் கலந்து கொள்கிறார். “ இதையொட்டி திமுக தலைமையுடன் அமித்ஷா பேசுவதற்கான ஏற்பாடுகளை திமுக-பாஜக தலைவர்கள் செய்து வருகின்றனர்” என்று தினமணி செய்தி வெளியிட்டிருந்தது . அப்போது அறிவிப்பு வெளியாகாவிட்டாலும் பாஜகவுடன் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகள் உறுதிப்படும் என்ற ஊகங்கள் உலவின . உறுதிப்படும்? அப்படியானால் இந்தக் கூட்டணி குறித்து முன்பே வெள்ளோட்டம் பார்க்கப்பட்டிருக்கிறதா? ” கடந்த மூன்றுமாதங்களாகவே ஸ்டாலின் தலைமையில் பாரதிய ஜனதாவும் திமுகவும் கூட்டணிப்பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன. அதற்கு கவிஞர்தான் தூதர். தமிழிசையும் குருமூர்த்தியும் எதிர்ப்பு, இல.கணேசன் ஆதரவு. இந்தப்பக்கம் கனிமொழியின் நிபந்தனைகள். …இதையெல்லாம் கேரளத்தின் அத்தனை இதழாளர்களும் தண்ணியடித்தால் விரிவாகப் பேசிக்கொண்டிருந்தனர்.” என்று மலையாள உலகை நன்கறிந்த ஜெயமோகன் தனது வலைத்தளத்தில் எழுதியிருக்கிறார். இருவாரங்களுக்கு முன் எர்ணாகுளத்திற்கு வந்த அமித்ஷாவை தமிழக பாஜக தலைவர்கள் சந்தித்தனர். “தமிழகத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பான முடிவை எடுக்கும் உரிமையை என்னிடமே விட்டுவிடுங்கள்” என்று அவர்களிடம் தெரிவித்திருந்தார் அமித்ஷா. அதற்குச் சில நாள்கள் முன்பாக சுப்ரமணிய சுவாமி, கருணாநிதி விலகிக் கொண்டு ஸ்டாலினை முதல்வராக அறிவித்தால், திமுக-பாஜக-தேமுதிக கூட்டணி ஏற்பட வாய்ப்புண்டு என்பதைப் போன்று தனது ட்விட்டரில் ட்வீட் செய்திருந்தார். எதிர்பார்த்தபடியே இது சலசலப்புகளை ஏற்படுத்தியது. ஸ்டாலினின் விருப்பப்படிதான் இந்த யோசனை வைக்கப்படுகிறது என்று சிலரும், விஜயகாந்தின் மனநிலையை ஆழம் பார்க்கக் கருணாநிதியின் ஆலோசனையின் பேரில்தான் இது கூறப்பட்டுள்ளது என்றும், கட்சிக்குள்ளும் குடும்பத்திலும் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு ஏதும் எழாமல் இருக்க, ஒரு சாக்காகப் பயனபடுத்திக் கொள்ளும் நோக்கில் இது பேசப்படுகிறது என்றும் ஊடக வட்டாரங்களில் ஊகங்கள் மிதந்தன. “நேற்று (பதிவிட்ட நாள் 11.2.16) இதழாளர் ஒருவரிடம் பேசினேன். [சினிமா விவாதத்தில்தான்] இந்தத்தேர்தலில் 2 சதவீதம்தான் வாக்கு மாறுபாடு இருக்கும். அதன்பொருட்டே மூன்றாம் அணி என்று சொன்னார். ஆனால் திமுகவுக்கு அது ஒரு பிரச்சினையே அல்ல.அவர்களின் பிரச்சினை பணப்பட்டுவாடாவும் கள்ளவாக்கும்தான். காபந்து அரசாக அதிமுக இருந்தால் ஒன்றும் செய்யமுடியாது. ஆகவே மத்திய அரசின் ஆதரவு தேவை, மத்திய அரசு உண்மையாகவே கடிவாளம் பற்றவும் வேண்டும், இல்லையேல் வெற்றிவாய்ப்பே இல்லை என்றார்” என்று ஜெயமோகன் வேறு ஒரு காரணம் சொல்கிறார். சுவாமியின் கருத்தை நிராகரிப்பது போல் தமிழக பாஜகவில் எதிர்வினைகள் இல்லை. அது அவருடைய சொந்தக் கருத்தாக இருக்கலாம். ஆனால் கட்சித் தலைமைதான் உரிய முடிவெடுக்கும் என்பதுதான் அவர்கள் அதிகாரபூர்வமாக வெளியிடும் பதில். ஆனால் சுவாமி எல்லோரையும் கலந்து கொண்டுதான் அந்தக் கருத்தை வெளியிட்டார் என அவருக்கு நெருக்கமான ஆசிர்வாதம் ஆச்சாரி சொல்கிறார். இல.கணேசன் இன்னும் ஒருபடி மேலே போய், “ இதில் எங்களுக்கு என்ன பிரச்சினை? விடுதலை ஆசிரியர் வீரமணி போன்றவர்களுக்குத்தான் பிரச்சினை” என்று ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் தெரிவித்தார் ஆனால் பாஜகவோடு உறவு இல்லை என்று ஸ்டாலின் மறுத்தார். வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கடந்த புதனன்று (10/2/16) சென்னை வந்திருந்தார். அவர் பாஜகவிற்கு நெருக்கமான ஆன்மீகத் தலைவர் எனக் கருதப்படுபவர். பாஜக அரசால் இந்தாண்டு பத்மவிபூஷன் விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் தனது சென்னைப் பயணத்தின் போது ஸ்டாலினை அவரது இல்லத்திற்கே சென்று சந்தித்தார். அவர் பாஜக தலைமையிடமிருந்து ஏதேனும் செய்தி கொண்டு வந்திருக்கக் கூடும் என்ற ஊகங்கள் கசிந்தன. ஆனால் “"தமிழக சட்டப்பேரவை தேர்தலை திமுகவும் பாஜகவும் ஓரணியில் சேர்ந்து சந்திக்க எவ்வித வாய்ப்பும் இல்லை. பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்கலாம் என வெளியாகியிருக்கும் தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை. ஆனால், யாரெல்லாம் எங்களை அரசியலில் தீண்டத்தகாதவர்கள் போல் பாவித்தார்களோ அவர்களெல்லாம் எங்களை நோக்கி படையெடுப்பது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. எங்களுடன் கூட்டணி அமைத்துக் கொள்வதில் விருப்பம் இருப்பதாக பாஜகவிடம் இருந்து எவ்வித அதிகாரபூர்வ தகவலும் இதுவரை வரவில்லை.” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார் ஸ்டாலின் ஒருவேளை அமித்ஷா கருணாநிதி சந்திப்பு வரும் 17ஆம் தேதி நடக்குமானால் அதற்கு முன் கருணாநிதியைச் சந்தித்து விட வேண்டும் என்று காங்கிரஸ் கருதியது . இதற்காக 13ஆம் தேதியன்று குலாம் நபி ஆசாத் சென்னை வந்து கருணாநிதியை சந்தித்தார். அவரை வாசலில் நின்று வரவேற்றவர், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியினால் வழக்குப் போடப்பட்டு சிறை சென்று மீண்ட கனிமொழி! திமுக –காங்கிரஸ் கூட்டணி அமைந்திருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. ஆனால் ஒன்று தெளிவாகப் புலனாகிறது. தமிழகத்தில் தேசியக் கட்சிகள் மாநிலக் கட்சிகளைச் சார்ந்து இருக்கிறது என்பது மறுபடியும் இந்தத் தேர்தலில் நிரூபணமாகிறது. தமிழ் முரசு (சிங்கப்பூர்) 14.2.2016

ஸ்டாலினுடன் ஓரு சந்திப்பு: 234 தொகுதிகளிலும் நமக்கு நாமே பயணத்தை முடித்த பின் நேற்று பத்திரிகையாளர்களுடன் நடத்திய உரையாடலுக்கு நானும் அழைக்கப்பட்டிருந்தேன்.முதல் கேள்வி எழுப்பும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டது. நானெழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் இன்றைய நாளிதழ்களில் வெளியாகியுள்ளன. எனவே அதைத் தனியாக விவரிக்கப் போவதில்லை. (நாளிதழ்கள் வாசிக்காத நண்பர்களுக்காக அவை கீழே தனியே தரப்பட்டுள்ளன.) எல்லோருக்கும் மொத்தமாக ஒரு எலக்‌ஷன் கும்பிடு போட்டுவிட்டு நகர்ந்து நாற்காலியில் அமர்ந்து விடாமல், ஸ்டாலின் அறைக்குள் நுழைந்ததும் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்துக் கை குலுக்கினார். செய்தியாளர்கள் அருகிலேயே நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அவரது பயணம் பற்றி தயாரிக்கப்பட்டிருந்த குறும்படத்தைப் பார்த்தார். இதன் மூலம் அறையில் ஓர் இணக்கமான, தோழமையோடு உரையாடும் சூழலை உருவாக்கினார். பின் அவருக்கென்று தனியே போடப்பட்டிருந்த ஒற்றை நாற்காலியில் அமராமல் நின்று கொண்டே உரையாற்றவும், பதிலளிக்கவும் செய்தார். அரசியலை நோக்கை ஒதுக்கிவிட்டு, ஒரு புரபஷனலாகப் பார்த்தால் அவரது உடை, கைகுலுக்கல், குறும்படம் எல்லாவற்றிலும் ஒரு திட்டமும் நுட்பமும் இருந்தது. தரமான தொழில்நுட்பமும், தொழில்முறை விளம்பர உத்திகளும் காணப்பட்டன. அதற்குக் காரணமாக இருந்த, பின்னிருந்து உழைத்த, மீடியா குழுவினர் பாராட்டுக்குரியவர்கள். அரசியல் தலைவர்களை, குறிப்பாக ஆளும் கட்சித் தலைவர்களை அணுகிப் பேசுவது, என்பது கடினமாகிவிட்ட இன்றையச் சூழலில் அடித்தள மக்களைத் தேடிச் சென்று சந்திப்பது என்ற அணுகுமுறை (அதன் பின் அரசியல் லாபம் என்ற நோக்கமிருந்தாலும்) வரவேற்கப்படவேண்டிய ஒன்று. ஆனால் ஸ்டாலினின் இந்த அணுகுமுறை எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. ஏறத்தாழ 25 ஆண்டுகளாக நான் அவரை அறிவேன். அவருக்கு எப்போதும் அடித்தளத்தின் துடிப்பை, கட்சி நிர்வாகிகள் என்ற வடிகட்டிகளைத் தவிர்த்து விட்டு, நேரிடையாக அறிந்து கொள்வதில் ஓர் ஆர்வம் உண்டு. அறிவாலயத்திற்கு வரும் கட்சிக்காரர்களானாலும் சரி, மேயராக இருந்த போது நகரில் இருந்த குடியிருப்பு நல சங்க நிர்வாகிகளை அவர்கள் வசிப்பிடங்களில் சென்று சந்தித்த போதும் சரி, உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போதும் சரி இதைக் கைவிடாது பின்பற்றி வந்திருக்கிறார். ஆனால் அவருக்குக் கிடைக்கும் feedbackஐ என்ன செய்கிறார் என்பது இன்றுவரைக்கும் தெளிவாகவில்லை. எப்போதும் மலர்ந்த முகம், இனிய சொல் என்ற இரண்டையும் கைவிடாது இருக்கிறார். அவரைச் சீண்டி கோபமடையச் செய்வது கடினம். இந்தப் பண்புகளையும், அடித்தளம் நோக்கிய outreachயும் தொடர்ந்து கடைப்பிடித்தால் எதிர்காலத்தில் தனக்கென ஒரு வசீகரத்தை அவர் உருவாக்கிக் கொள்ள இயலும் செய்தியாளர்களைக் கையாள்வதில் அவருக்குக் கருணாநிதியிடம் உள்ள சாதுர்யங்கள் இல்லை. சில கேள்விகளுக்கு மழுப்பலாக பதில் அளிக்கிறார் என்றாலும் அவரைப் போன்ற சிலேடை, சொல்விளையாட்டு, நகைச்சுவை இவரிடம் குறைவு. செய்தியாளர்கள் “யாருடன் கூட்டணி?” என்று கருணாநிதியிடம் கேட்டால்,”யாருடன் வைத்துக் கொள்ளலாம், நீங்க என்ன சொல்றீங்க?” என்று பதிலுக்கு கேள்வியை நம்மிடம் திருப்புவார். ஆனால் ஸ்டாலின் அதற்கு சின்சியராக பதில் சொல்ல முயல்கிறார்.(தவிர்க்க முடியாத இடங்களில் மழுப்புகிறார் என்ற போதும்) அரசியல் வெப்பத்தில் இதையெல்லாம் இழந்துவிடாமல் இருந்தால், ஸ்டாலின், அன்புமணி போன்றவர்களால் ஒரு மேம்பட்ட அரசியல் கலாசாரம் தமிழ் நாட்டில் அரும்ப வாய்ப்புண்டு இனி என் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் கேள்வி: 234 தொகுதிகளுக்கும் சென்று வந்திருக்கிறீர்கள்? எல்லாத் தொகுதிகளிலும் காணப்படும் பொதுவான அம்சம் என்ன? அடித்தள மக்களின் பொது விழைவு, பொது தேவை என எதை உணர்கிறீர்கள்? மக்களை பொறுத்தவரையில் அடிப்படை தேவையாக தமிழகத்தில் உடனடியாக ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதாக இருக்கிறது. வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற உந்துதலும் ஏற்பட்டுள்ளது கேள்வி:- ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு என்று அறிவித்திருக்கிறீர்கள். வருவாய் இழப்பை எப்படி ஈடுகட்டுவீர்கள்? இலவசங்களைக் கைவிடுவீர்களா? எங்கள் மீது அதிக வரி விதிப்பீர்களா? பதில்:- வருவாயை பெருக்க மாற்று திட்டங்கள் வைத்திருக்கிறோம். அதை தற்போது தெரிவிக்க முடியாது. ஆனால் மதுவிலக்கை நிச்சயம் நடைமுறைப்படுத்துவோம் கே. கடந்த சில நாள்களாக, மக்கள் நலக் கூட்டணி பற்றி திமுக தரப்பு விமர்சனங்களில் ஒரு பதற்றம் காணப்படுகிறது. நேற்று ஜி.ஆரை (ஜி.ராமகிருஷ்ணன், மார்க் கம்யூ) விமர்சித்து கருணாநிதியே எழுதியிருக்கிறார். ஏன் இந்தப் பதற்றம்? அவர்களை உங்களுக்கு ஒரு அச்சுறுத்தல் எனக் கருதுகிறீர்களா? பதில்: அவர்களை நாங்கள் ஒரு பெரிய சக்தியாகக் கருதவில்லை. ஆனால் எங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். இல்லையென்றால் அவை உண்மை எனக் கருதப்பட்டுவிடும் கே: காங்கிரஸ் -திமுக கூட்டணி எந்த நிலையில் உள்ளது? பதில்: நாளை குலாம் நபி ஆசாத் வருகிறார்.அதன் பின் தெரியும்