தமிழ் மின் இலக்கியத் தொகுப்பு

சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த 1965ஆம் ஆண்டுக்கும் அதன் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் 2015ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பதிப்பிக்கப்பட்ட சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய நூல்களின் மின்வடிவம்தான் இந்தப் பகுதியில் நீங்கள் காணும் தமிழ் மின்னிலக்கியத் தொகுப்பு. இத்தொகுப்பில் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், இலக்கியக் கட்டுரைகள் போன்றவை அடங்கியுள்ளன. அவை அனைத்துமே சிங்கப்பூரர்கள் அல்லது சிங்கப்பூர் நிரந்தரவாசிகளால் எழுதப்பட்டவை அல்லது சிங்கப்பூரைப் பற்றியவை. இதுபோன்ற ஒரு மின்தொகுப்பைத் தேசிய நூலக வாரியம் தமிழில் வெளியிடுவது இதுவே முதல் முறை. சிங்கப்பூரர்கள் அடங்கிய ஒரு சிறு குழு, இந்தத் திட்டத்தை முன்வைத்ததோடு அதற்குத் தேவையான சமூக ஆதரவையும் வளங்களையும் ஒன்றுதிரட்டிச் செயல்வடிவமும் கொடுத்தது. 22 ஆகஸ்ட் 2015 அன்று, சிறப்பு விருந்தினர், துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான திரு தர்மன் சண்முகரத்னம், பிரதமர் அலுவலக அமைச்சரும், உள்துறை, வர்த்தக தொழில் அமைச்சுகளுக்கான இரண்டாம் அமைச்சரும், திட்டத்தின் புரவலருமான திரு எஸ் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் இந்தத் தமிழ் மின்னிலக்கியத் தொகுப்பு இந்த நாட்டிற்குச் சிங்கப்பூர் இந்திய சமூகத்தின் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தை நிர்வகிக்கும் தேசிய நூலக வாரியத்தோடு தேசிய மரபுடைமைக் கழகம், தேசிய கலைகள் மன்றம், சிங்கப்பூர்ப் புத்தக வளர்ச்சி மன்றம் ஆகிய அமைப்புகளும் ஒன்றிணைந்து ஆதரவு வழங்கியுள்ளன. இந்தத் திட்டத்தை உருவாக்க உதவிய அனைவரின் பெயர்களும் நன்றிநவிலும் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.

மின்தொகுப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து நூல்களின் அச்சுப் பதிப்புகளும் தேசிய நூலக வாரியத்தின் நூலகங்களில் கிடைக்கும்.

 மின்னூல்களை வாசிக்க: http://eresources.nlb.gov.sg/printheritage/browse/Tamil_Digital_Heritage_Collection.aspx