திசைகள் அறிமுகப்படுத்தும் புத்தகம்,

அறிமுகப்படுத்துபவர்: ராஜி சங்கர் 

(திசைகள் ஆசிரியர் குழு)

 

பொன்னுலகம் பதிப்பகம் பதிப்பித்த

இரா. முருகவேள் எழுதிய

'மிளிர்கல்'.

சிலப்பதிகாரத்தில் மாதவியிடமிருந்து பிரிந்து வந்த கோவலன், கண்ணகியுடன் மதுரை நோக்கிப் பயணித்த வழியையும், கோவலன் கொலையுண்ட பிறகு மதுரையை அழித்து விட்டு, கண்ணகி பயணித்த வழியையும் தேடிப் புறப்படும் பெண் முல்லை மற்றும் அவள் குழுவினர் சந்திக்கும் நபர்கள், அனுபவங்கள், கேள்விகள் இவற்றினூடே மிளிர்கற்கள் என்று சொல்லப்படுகிற மாணிக்கம், மரகதம், கோமேதகம் போன்ற கற்களுக்காகச் சுரண்டப்படும் பொதுமக்கள், அதன் பின்னிருக்கும் கார்ப்பரேட் அரசியல், பல்வேறு வரலாற்று ஆய்வுகள்  போன்றவற்றைப் பேசியிருப்பதால் தமிழ் நாவல்களில் 'மிளிர்கல்' முக்கியமானதொரு படைப்பு என்று திசைகள் கருதுகிறது. படிக்க ஆசையிருந்தும் படிக்க நேரம் வாய்க்காத நண்பர்களுக்காக மிளிர்கல்லின் கதைச்சுருக்கத்தை 3 பகுதிகளாக திசைகள் வெளியிடுகிறது. இதன் நோக்கம் நாவலின் அழகைச் சிதைப்பதல்ல, அதன் ஆழத்தையும் பரிமாணத்தையும் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதே .

பகுதி 1:

பேராசியர் ஸ்ரீகுமார் நேமிநாதன் செமி ப்ரீசியஸ் ஸ்டோன்ஸ் என்றழைக்கப்படுகிற மாணிக்கம், நீலம், மரகதம், கோமேதகம் போன்றவைகள் பண்டைக்காலத்தில் கிடைத்த இடங்கள் பற்றியும், இக்காலத்தில் கிடைக்கும் இடங்கள் பற்றியும் தொடர்ச்சியான ஆய்வுகளைச் செய்து கொண்டிருக்கும் ஒரு பேராசிரியர். "பண்டைத் தமிழகத்தின் வணிகம்" என்ற தலைப்பில் உரையாடிவிட்டு வெளியே வரும் போது புகழ்பெற்ற ஜே.கே டைமண்ட்ஸ் என்ற நிறுவனத்தின் இன்னோவா கார் இவருக்காகக் காத்து நிற்கிறது. இவருடைய ஆராய்ச்சிக்கு ஸ்பான்சர் செய்வதாக முடிவாகிறது.

மும்பையில் வளர்ந்த தமிழ்ப்பெண் முல்லை. ஜவஹர்லால் நேரு யுனிவர்சிட்டியில் ஜர்னலிஸம் படித்த பெண். சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட, கோவலனும் கண்ணகியும் பயணம் செய்த வழியில் பயணம் செய்து அதை ஒரு குறும்படமாக்கப் பதிவு செய்யும் நோக்கில் சென்னைக்குப் பயணிக்கிறாள். கல்லூரியில் தன்னுடைய சீனியரான, கம்யூனிஸ்ட் நவீன் இவளது குறும்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஒப்புக் கொள்கிறான். இயக்கத்தில் காரணமற்ற கைதுகள் நடந்து கொண்டிருக்கும் சூழலில் சிறிது நாட்கள் பயணத்தில் இருப்பது நவீனுக்குத் தேவையாக இருந்தது. மேலும் அடித்தட்டு மக்களிடம் நேரடியாகப் பழகவும், இயக்கம் குறித்த அடுத்தடுத்த செயல்பாடுகளையும் தீர்மானிக்க இந்தப் பயணம் உதவும் என்பதாலும் நவீன் ஒப்புக் கொள்கிறான்.

காவிரியும் கடலும் கலக்கும் இடம் பூம்புகார். அந்தக் காலத்தில் அங்கு பெரிய துறைமுகம் இருந்திருக்கிறது. பண்டைத் தமிழகத்தின் மிளகு, தந்தம், முத்துக்கள், மிளிர்கற்கள் எல்லாமும் இங்கிருந்தே மேலை நாடுகளுக்கு ஏற்றுமதியாகியிருக்கின்றன. பூம்புகாரை கடற்கரையை ஒட்டிய பகுதி மருவூர்ப்பாக்கம். இது சாதாரண மக்கள் வாழும் பகுதியாக இருந்திருக்கிறது. வடக்கே காவிரிப்பூம்பட்டினம். தெற்கே காவிரி ஆறு. மேற்கே சோழர்களின் கோட்டை. அதைச் சுற்றி அகழி. அரண்மனையை ஒட்டி பெரும் பணக்காரர்களும் வணிகர்களும் வாழும் பட்டினப்பாக்கம். இரண்டையும் இணைக்குமாறு நிரந்தரக் கடைவீதி நாளங்காடி இருந்தது. அதில் மாநாய்க்கன் மகள் கண்ணகிக்கும் மாசாத்துவான் மகன் கோவலனுக்கும் திருமணம் நடைபெறுகிறது.

இதையெல்லாம் நினைத்துக் கொண்டு முல்லையும் நவீனும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் பயணத்தைத் தொடங்குகிறார்கள். சீர்காழியில் இறங்கி பூம்புகாரை அடைகின்றனர். முன்பு கரைக்கு வந்த பின்னும் பாய்மரங்களை மடக்காமல் கப்பல்கள் வந்திறங்கும் காவிரிக் கரை இன்று வெறும் நீர்த்தேக்கமாக இருப்பதைக் கண்டு முல்லை அதிர்ச்சியடைகிறாள். கோவலனும் கண்ணகியும் வாழ்ந்த எழுநிலை மாடம் சாம்பல் வண்ணத்தில் செப்பனிடப்பட்டு தன் கலையழகை இழந்து நிற்பது கண்டு மிகுந்த மனவேதனை கொள்கிறாள். அவர்கள் தங்கியிருந்த விடுதியில் விசாரித்துப் பார்த்த போது, அங்கு வரலாற்றின் மிச்சங்களாக இருக்கிற படகுத்துறையையும் புத்த விஹாரத்தையும் பற்றி மட்டுமே சொல்கிறார்கள். கடலுக்கு அடியில் 10கி.மீ தொலைவுக்கு மூழ்கியிருக்கும் கட்டுமானங்களைப் பார்க்க முடியாது என்று தெரிந்ததும் அவள் வேதனை உச்சம் பெறுகிறது. படகுத்துறையையும் புத்தவிஹாரத்தையும் பார்த்துவிட்டுத் தன் பயணம் இவ்வளவு சீக்கிரத்தில் முடிவுக்கு வந்து விடும் என்பது அவளை முடக்கிப் போட்டது.

ஆத்திரத்தில் படுக்கையில் சாய்ந்தாள். பால்கனி வழி கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டு கிடந்தவள் மனதில் ஆயிரம் எண்ணவோட்டங்கள். திடீரென்று கடற்கரையில் கரிய வட்ட விழிகளுடன் ஒரு பெண்ணுருவம் நடந்து வருவதாகப்படுகிறது. "நீ தேடி வந்தது வெறும் கட்டடங்களையா? புதைந்து கிடக்கும் இந்த நகரத்தின் ஆன்மா இங்கேதானே இருக்கிறது. நானிருப்பது தெரியவில்லையா?" என்று அந்தப் பெண்ணுருவம் இறைஞ்சுகிறது. உன்னித்துப் பார்க்கும்போது உருவம் மறைந்து வெறும் அலைகளே மிஞ்சுகின்றன.

மணிக்கிராமத்தில் இருக்கும் படகுத்துறையைப் பார்க்கப் பயணிக்கிறார்கள். படகுகள் இந்தப் படகுத் துறையோரம் வந்து பொருட்களை இறக்கும்,. பல்பு போல இருபுறம் குறுகியும் நடுவில் சுழி போல அகன்றும் இருந்தது படகுத்துறை. சின்னக் கப்பல்கள் இரண்டு மட்டுமே நிறுத்துமளவுக்கு இருந்தது. சோழ மன்னன் நிறைய கால்வாய்களைக் கட்டி வைத்திருந்திருக்கிறான். இதன் வழியே படகுப் போக்குவரத்து நடந்திருக்கிறது.

அடுத்ததாக சம்பாபதி அம்மன் கோவிலை அடைகிறார்கள். அதன் வாசலில் 2 பெரிய பூதங்களைக் காண்கிறார்கள். 'பொய் பேசினால் கொன்று விடும் சதுக்க பூதங்களா இவை!' என்று அவர்கள் விவாதித்திக் கொண்டிருக்கும் போது பேராசிரியர் ஸ்ரீகுமாரை அவர்கள் சந்தித்து ஒருவருக்கொருவர் அறிமுகமாகிறார்கள். அங்கு நரபலி பற்றிய இவர்களின் கேள்விகளுக்குப் பேராசிரியர் பதில் சொல்கிறார். ஸ்ரீரங்கம் வரைக்கும் அவரும் செல்ல வேண்டியிருப்பதால் இவர்களுடன் அவரும் இணைந்து கொள்கிறார்.

மறுநாள் காலையில் கோவனும் மாதவியும் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் திருக்கடையூருக்குச் செல்கிறார்கள். அது புகாரிலிருந்து 10 கி.மீ தூரத்தில் இருந்தது. அந்தக் காலத்தில் கணிகையர்கள், தாசிகள் வாழ்வு, மனநிலை பற்றி பேசுகிறார்கள். தான் செய்தி சேகரிக்கச் சென்ற மும்பை விடுதிகளின் பாலியல் தொழிலாளர்களின் நிலை பற்றி நினைவு கூர்கிறாள்.

நாட்டுப்புற வழக்கில் இருக்கும் சிலப்பதிகாரக் கதைகளைப் பகிர்ந்து கொள்ளக் கூடியவர்களை மூவரும் சந்திக்கிறார்கள். அவர்கள் கதைப்படி கண்ணகி பூம்புகார்க்காரி அல்ல. அவள் பாண்டியனின் மகளாகப் பிறக்கிறாள். மகள் பிறந்த நேரம் பாண்டியனுக்குச் சரியில்லையென்று ஜோசியக்காரன் சொன்னதால், குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டுவிடுகிறார்கள். அந்தப் பெட்டி மாநாய்க்கன் கையில் கிடைத்து அவர் மகளாக வளர்கிறாள். கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணமாகிறது. கண்ணகியை விட்டுவிட்டு மாதநல்லி என்ற தாசி வீட்டில் கிடக்கிறான். மனம் திருந்திவர  விரும்பும் போது 18 களஞ்சு பொன் கொடுத்து விட்டுப் போகும்படி மாதநல்லி சொல்கிறாள். அதற்காக கோவலன் சிலம்போடு மதுரைக்குப் போகிறான். அங்கு பொற்கொல்லனின் சதியால் கோவலனை ராஜா கொல்கிறான். கண்ணகி செய்தி கேள்விப்பட்டுக் காளியாக மாறி மன்னனை அழிக்கிறாள். மாதவி உடன்கட்டை ஏறுகிறாள். இவ்வாறு கதை சொல்கிறார் ஒரு நாட்டுப்புறக் கலைஞர்.

இன்னொரு கதை, குழந்தையில்லாத பாண்டியன் காளியை எவ்வளவு தொழுதும் தனக்குக் குழந்தை பிறக்காததால், அந்தக் கோயிலை இழுத்துப் பூட்டி யாரும் விளக்கேற்றக் கூடாது என்று உத்தரவிடுகிறான். அப்பொழுது புகாரிலிருந்து வந்த ஒரு  எண்ணெய் வியாபாரியும் அவன் மனைவியும் வியாபாரம் நன்றாகப் போனால் விளக்கு ஏற்றுவதாகக் காளியை வேண்டுகிறார்கள். அதைப் போல விளக்கு ஏற்றியதும் ராஜாவின் கோபத்துக்கு ஆளாகி அந்த வியாபாரி கொலையுண்டாகிறான். அவன் மனைவி அதிர்ச்சியில் இறந்து விடுகிறாள். அவளே அடுத்தப் பிறவில் மாதவியாகவும், காளி கண்ணகியாகவும் பிறந்து ராஜாவைப் பழி வாங்குகிறாள்.

இன்னொரு கதையும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. மயிலுக்குப் போர்வை தந்தான் என்று அறியப்படுகிற பேகன் என்ற வள்ளலின் மனைவி பெயர் கண்ணகி. பேகனும் கோவலனைப் போலவே பரத்தையரிடம் போய் மனைவியை மறந்ததாகவும் ஒரு பஞ்சதந்திரக் கதை தொடர்கிறது.

இதன்பின் அவர்கள் காவிரியின் கடைமடைப் பகுதி வழியாக ஸ்ரீரங்கம் நோக்கிப் பயணிக்கிறார்கள். காவிரி அடைந்த உருமாற்றங்களையும் வழியில் சந்திக்கும் மனிதர்களின் கஷ்ட நிலையையும் கவனிக்கிறார்கள். ஜே.கே டைமண்ட்ஸ் ஸ்ரீகுமாருக்கு ஸ்பான்சர் செய்வது தெரிய வருகிறது. அது பற்றி நவீன் விவாதம் செய்கிறான்.

விடிந்ததும் நவீனும் முல்லையும் புரொபசர் ஸ்ரீகுமாரைத் தேடுகிறார்கள். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. புரொபசர் கடத்தப்பட்டு விட்டார். யாரால்? ஏன்? 

அடுத்த பகுதியில்...