அறிவிப்புகள்

புத்தகம் புதிது 33 : பொன்னகரம் (நாவல்) அரவிந்தன் மின் நூல்

மைய நீரோட்டம் எனச் சொல்லப்படும் உலகில் இருப்பவர்கள் நுழையத் தயங்குகிற சாம்பல் உலகத்தில் வெளிச்சத்தைத் தேடுகிற நாவல் இது. அவர்களுக்கான காரணங்களையும் நியாயங்களையும் அவர்களது பின்புலத்தில் வைத்துப் பார்க்கிறது. இந்தச் சாம்பல் நிற உலகத்தில் யார் யாரெல்லாம் குற்றவாளிகள், குற்றம் என்றால் என்ன என்பது குறித்த கேள்விகளையும் எழுப்புகிறது. நகரத்தின் வளர்ச்சிப் பசி தின்று தீர்த்த அந்த உலகத்தின் யதார்த்தங்களையும் விழுமியங்களையும் தேடிச் சென்னையின் சந்துகளில் நம்மைப் பயணிக்க வைக்கிறது. இதில் வசிப்பவர்கள் சென்னையின் வளர்ச்சிக்குத் தங்கள் வாழ்க்கையை விலையாகக் கொடுத்திருக்கிறார்கள். குற்றங்களும் உதிரித் தொழில்களும் மட்டுமல்ல அவர்கள் வாழ்க்கை. அவர்களுக்கும் முன்னேற வேண்டும் என்னும் ஆசை உண்டு, கடவுளர்கள் உண்டு, உறவுகளும் லட்சியங்களும் உண்டு. ‘பொன்னகரம்’ வெளியில் இருப்பவர்களுக்கு ஒரு சிறிய காலனி. ஆனால் அவர்களைப் பொருத்தவரை அது ஒரு ஊர். அந்த ஊரின் பொதுத்தன்மை சாம்பல் நிறம். அந்தச் சாம்பல் நிறப் புகைக் கூட்டத்தை விலக்கி அந்த ஊரின் தரிசனத்தை அரவிந்தன் காட்டுகிறார். உங்களை இன்னொரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும் இந்நாவல் ஒரு கட்டத்தில் உங்களையும் அந்த உலகத்தின் கதாபாத்திரங்களாக மாற்றிவிடலாம். காலச்சுவடு வெளியீடு விலை ரூ. 230/-

புத்தகம் புதிது 32 காஃப்காவின் நாய்க்குட்டி (நாவல்) நாகரத்தினம் கிருஷ்ணா மின் நூல்

நாம் ஒவ்வொருவருமே பொன், பொருள், புகழ், தத்துவம், விடை என்று ஏதோ ஒன்றைத் துரத்தியபடி ஓடிக்கொண்டிருக்கிறோம். அவ்வோட்டத்தையே வாழ்வென நம்பவும் செய்கிறோம். அவ்விதமாகவே இந்நாவலின் மையப் பாத்திரங்களும் தாங்கள் அவாவுற்ற ஒன்றின்பொருட்டு அல்லலுற்று அலைகிறார்கள். அத்தேடலின் கதை புதுச்சேரியிலும், யாழ்ப்பாணத்திலும் தொடங்கி, பிரான்ஸில் வளர்ந்து, செக் குடியரசில் முடிகிறது. தேடியலைந்ததைக் கண்டடைந்தார்களா? அதற்காக அவர்கள் கொடுத்த விலை எவ்வளவு? அடைந்த கணத்தில் அவ்வாசைகளின் மதிப்பென்ன? என்பதான கேள்விகளுடன், கதை முடியுமிடத்திலிருந்து ஒரு வாசகன் தனக்குள் தேடத் தொடங்கினால் அதுவே இந்நாவலின் வெற்றி. காலச்சுவடு வெளியீடு விலை ரூ. ரூ. 295/-

புத்தகம் புதிது 31 1958 (நாவல்) அ. இரவி மின் நூல்

1958ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்மீது ஏவப்பட்ட இன வன்முறை குறித்துப் பேசுகிற புதினம் இது. இன வன்முறை நிகழ்ந்த நாட்களிலும் அதன்பின் வந்த நாட்களிலும் மனநிலை ரீதியாக ஒரு தமிழ்க் குடும்பம் சந்திக்கும் நெருக்கடிகளைச் சித்திரிக்கிறது; மொழிநடையினாலும் கதை சொல்லும் உத்தியினாலும் சிறப்புப் பெற்றிருக்கிறது. காலச்சுவடு வெளியீடு விலை ரூ. 200/-

புத்தகம் புதிது 30தோட்டியின் மகன் (நவீன இந்திய கிளாசிக் நாவல்) தகழி சிவசங்கரப் பிள்ளை தமிழில்: சுந்தர ராமசாமி மின் நூல்

நவீன மலையாளப் புனைவெழுத்தில் அனல் காற்றைப் படரச் செய்த ஆரம்பகாலப் படைப்புகளில் முக்கியமானது ‘தோட்டியின் மகன்.’ தகழி சிவசங்கரப் பிள்ளை 1947இல் எழுதிய நாவல். இலக்கியத்தில் மட்டுமல்ல; சமூகப் பார்வையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதுவரை இலக்கியத்தில் யாரும் பார்க்காத களம்-சேரி; கேட்காத மொழி-பாமரக் கொச்சை; முகர அஞ்சிய வாடை-மலம்; வாழ்ந்திராத வாழ்வு - தோட்டிப் பிழைப்பு என்று பின்தள்ளப்பட்ட உலகைப் பொதுக் கவனத்துக்கு வைத்தது நாவல். சமூக அரங்கிலும் அரசியல் துறையிலும் அதன் மற்றொலிகள் எழுந்தன என்பது நாவலின் வெற்றி. விமர்சனங்கள் கூறப்பட்டாலும் இன்றும் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் இந்த நாவலே மலையாளத்தில் தலித் வாழ்வை இலக்கியமாக்கியதில் முன்னோடிப் புனைவு. காலச்சுவடு வெளியீடு விலை ரூ. 150/-

புத்தகம் புதிது; 29 கவி வந்த்யகட்டி காயியின் வாழ்வும் சாவும் (நவீன இந்திய கிளாசிக் நாவல்) மகாசுவேதா தேவி தமிழில்: சு. கிருஷ்ணமூர்த்தி மின் நூல்

வங்காளத்தில் சைதன்யரின் வருகையோடு சமூகச் சலனங்கள் உருவான பதினைந்தாம் நூற்றாண்டின் பழங்குடிச் சமூகத்தில் பிறந்த ஒருவன் கவி வந்த்யகட்டி என்று பெயர்சூட்டிக்கொண்டு காவியம் படைக்கிறான், தனது சாதியை அறிவிக்காமல். அறிவை உயர்குடியின் ஏக உரிமையாக கருதிக்கொண்டிருக்கும் அரசனும் அவனுக்கு நெருக்கமானவர்களும் அவனை உயர்குடியைச் சேர்ந்தவன் என்று எண்ணி அங்கீகாரமும் அரசகவி என்ற பதவியும் வழங்குகிறார்கள். அவனது சாதி தெரியவரும்போது அவனைக் கொலைக்களத்துக்குத் தள்ளுகிறார்கள். அவன் பிறந்த சமூகமோ அவனது தனித்துவம் புரியாமல், சாதித்தலைமை ஏற்றுக்கொள்ள வற்புறுத்துகிறது; அவன் மறுக்கவும் அவனைக் கைவிட்டுச்செல்கிறது. பிராமணப் பெண்ணோடான அவனது காதலும் சாதி காரணமாக முறிகிறது. படைப்புணர்வின் உந்துதலுக்கும் மனிதத்துவம் உறைந்துபோன யதார்த்தத்துக்குமிடையில் சிக்குண்டு இறுதியில் மரணத்தைத் தழுவும் ஒரு கவியாளுமையின் வாழ்வை உள்ளோடும் சமூக விமர்சனத்துடன் நாட்டார் கதையாடலாக படைத்திருக்கிறார் மகாசுவேதா தேவி. காலச்சுவடு வெளியீடு விலை ரூ. 190/-

புத்தகம் புதிது 28 தலைகீழ் விகிதங்கள் (நவீனத் தமிழ் கிளாசிக் நாவல்) நாஞ்சில் நாடன் மின் நூல்

மனிதனின் அக வேட்கைக்கும் யதார்த்தத்துக்குமான இடைவெளிகளை சமன் செய்வதே வாழ்வின் சவால். 70களில் கிராமப்புற பட்டதாரி இளைஞர்கள் உறவுகள் சார்ந்தும் நிலம் சார்ந்தும் எழுந்த நிர்பந்தங்களுக்கு தமது சுயத்தை இழக்க நேரிட்டது. ஆனால் இன்றைய கணினியுக இளைஞர்கள் தனி அடையாளங்களை இழந்து பொது அடையாளங்களுக்குள் தங்களது இருப்பை பத்திரப்படுத்திக் கொள்கின்றனர். 'தலைகீழ் விகிதங்கள்' நாவலை இன்று படிக்கும்போது நேற்றைய தலைமுறையினரின் அகப் போராட்டங்களின் வழியாக, இன்றைய இளைஞர்களின் மனச் சிக்கல்களை நம்மால் அக்கறையுடன் அனுசரணையுடன் புரிந்துகொள்ள முடிகிறது. கூடவே, நவீன வாழ்வின் அபத்தங்களையும் அதன் இலக்கறியா பயணங்களையும். காலச்சுவடு வெளியீடு விலை : ரூ. 280/-

புத்தகம் புதிது 27; சாயாவனம் (தமிழ் கிளாசிக் நாவல்) சா. கந்தசாமி மின் நூல்

சாகித்திய அக்காதெமி விருது பெற்றுள்ள சா. கந்தசாமியின் முதல் நாவல் ‘சாயாவனம்’. ஆங்கிலத்திலும் பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த நாவல், வீடியோ படமாகவும் வெளிவந்துள்ளது. இப்போது காலச்சுவடு பதிப்பகத்தின் கிளாசிக் வரிசையில். சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன், சுற்றுச்சூழல் பற்றி அதிகமும் பேசப்படாத காலத்தில், இயற்கையுடனான மனிதனின் போராட்டத்தை மையமாக வைத்து, தஞ்சை மாவட்டக் கிராமியப் பின்னணியில் எழுதப்பட்ட இந்த நாவல், இன்றைய சூழலுக்கும் பொருத்தமான வாசிப்பனுபவத்தைத் தருகிறது. “ஒன்றையழித்து ஒன்றாக, புதுயுகமென மாறிமாறி முகம் காட்டி முன்னகர்ந்தபடி இருக்கிறது காலம். ஒன்று அழிந்து இன்னொன்று தோற்றம் கொள்கிறது. ‘சாயாவனம்’ நாவல் அழியாத ஒரு குறியீடாக அதைச் சுட்டிக்காட்டியபடி நிற்கிறது” என்கிறார் முன்னுரையில் பாவண்ணன். காலச்சுவடு வெளியீடு விலை : ரூ. 175/-

புத்தகம் புதிது 26: ஜே.ஜே. சில குறிப்புகள் (நவீனத் தமிழ் கிளாசிக் நாவல்) சுந்தர ராமசாமி மின் நூல்

மனிதனுடன் தொடர்பு ஏற்படும்போது, மிகச் சுருங்கிய நேரத்தில், குறுக்குப் பாதை வழியாகக் கிடுகிடு என நடந்து, அவனுடைய மனத்தின் துக்கம் நிறைந்த குகைவாசலைச் சென்றடைகிறேன். என் மீது உன் துக்கத்தையெல்லாம் கொட என்ற செய்தியை எப்படியோ மறைமுகமாக என்னால் உணர்ததிவிட முடிகிறது. மனிதனுக்குரிய சகல பலவீனங்களும் கொண்ட எனக்கு, தங்களை என்னில் இனங்கண்டுகொள்ளும் மற்றவர்களின் தொடர்புகள் வாய்த்தவண்ணம் இருக்கின்றன. என்னைப் போலவே நான் சந்தித்தவர்களும் ‘இப்போது என்னைப் பிடித்துக்கொண்டிருக்கும் துக்கத்தை மட்டும் ஒரு புறச்சக்தி நீக்கித் தந்துவிட்டால் இனி வரவிருக்கும் துக்கங்களை நானே சமாளித்துத் தீர்த்துக் கொள்வேன்’ என்று பிரார்த்தனையில் ஏங்குவதை உணர்ந்திருக்கிறேன். தண்ணீரின் ருசிகள் வேறானவை என்றாலும் எந்த மனத்தைத் தோண்டினாலும் துக்கத்தின் ஊற்று கொப்பளிப்பதைப் பார்க்கலாம். மனித மனத்தின் அடிநிலைகளில் ஒரே திராவகம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. காலச்சுவடு வெளியீடு விலை : ரூ. 200/-

புத்தகம் புதிது 25மோகமுள் (நவீனத் தமிழ் கிளாசிக் நாவல்) தி. ஜானகிராமன் மின் நூல்

இந்த நாவல் பற்றி இலக்கியத் தரம் அறிந்தவர்கள் பெருமைப்படலாம். மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள ஜானகிராமனின் ‘மோக முள்’ தமிழில் நல்லதோர் சாதனை – பெரியதோர் சாதனை. க.நா. சுப்ரமண்யம் காலச்சுவடு வெளியீடு விலை : ரூ. 550/-

புத்தகம் புதிது 24; ஒரு புளியமரத்தின் கதை (நவீனத் தமிழ் கிளாசிக் நாவல்) சுந்தர ராமசாமி மின் நூல்

1966இல் முதல் பதிப்பு வெளிவந்த காலத்திலிருந்து தீவிர வாசகர்களின் கவனத்தில் இருந்துவரும் ‘ஒரு புளிய மரத்தின் கதை’ ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளியிட்டது. 2000த்தில் தமிழிலிருந்து நேரடியாக ஹீப்ருவில் மொழிபெயர்க்கப்பட்ட ‘ஒரு புளியமரத்தின் கதை’ குறுகிய காலத்தில் இரண்டு பதிப்புகள் கண்டதுடன் அம்மொழிக்குச் சென்றுள்ள முதல் இந்திய மொழி நூல் என்ற பெருமையையும் பெறுகிறது. ஒப்பீட்டிலக்கிய விமர்சகர் கே. எம். ஜார்ஜ் இந்நாவலை நோபல் பரிசுபெறத் தகுதியான தமிழ் நாவலாகக் குறிப்பிடுகிறார். காலச்சுவடு வெளியீடு விலை : ரூ. 200/-

புத்தகம் புதிது 23; உயிரின் யாத்திரை (நாவல்) எம்.வி. வெங்கட்ராம்

அதி யதார்த்தமான துயரில் தொடங்கும் இந்நாவல், பின்னர் இந்திய ஆன்மிக மனங்களுக்குள் உறைந்து கிடக்கும் தீவினைப் பயன்கள், முற்பிறவிச் சிந்தனைகள், பிறப்பறுத்தல் போன்றவற்றின் நிகழ்ச்சிப் பிரதியாக மாறுகிறது. மாயை மறைய / வெளிப்படும் அப்பொருள்/மாயை மறைய / மறைய வல்லார்கட்குக் / காயமும் இல்லை, கருத்தில்லை தானே என்ற திருமூலரின் தேடலை சதாசிவம், ராஜா, ராணி, லீலா, கோபு என்கிற பாத்திரங்களின் வாழ்க்கைக்குள் தேடிய முயற்சி ‘உயிரின் யாத்திரை’. காலச்சுவடு வெளியீடு விலை; ரூ. 75

புத்தகம் புதிது 22 பாகீரதியின் மதியம் (நாவல்) பா. வெங்கடேசன்

பாகீரதியின் கனவிற்கு வெளியே ஜெமினிக்கு நிஜத்தில் வேறொரு பெயர் இருக்கிறது, உறங்காப் புலி. ஜெமினியின் தாயாருடைய ஆசையால் சங்கிலிக்கு வேறொரு பெயர் உண்டானது, ஜெமினி. சவிதாதேவியின் சித்தப்பிரமைக்கு அப்பால் விபின் பாஸ்வானுக்கு வேறொரு பெயர் இருக்கிறது, உறங்காப்புலி. சில்லரைச் சாகஸங் களுக்கு வெளியே குடுமிநாதனின் பெயர் வாசுதேவன். ப்ராம் ஸ்டோக்கரின் உள்ளூர் கதை வடிவத்தில் ட்ராகுலாவின் பெயர் அரங்கநாதன் நம்பி. உபேந்திரநாத் தத்தாவின் கனவிற்கு அப்பால் பினித்ரா தேவிக்கான பூர்வப் பெயர் பேராபுடீமா. பேராபுடீமா சுயசாவை நிகழ்த்திக்கொள்வதற்கு முன்னால் தெக்கூவாக அறியப்பட்டவள். உறங்காப்புலியின் காதலின் பரவச உலகிற்கு வெளியே பாகீரதிக்குமேகூட இன்னொரு பெயர் இருக்கிறது, சவிதாதேவி. அரங்கநாதன் நம்பியினுடைய பூர்வ ஜென்மத்துப் பெயரறியாக் காதலியின் இந்த ஜென்மத்துப் பெயர் பாகீரதி. பெயர் பெயர்களை உற்பத்தி செய்துகொண்டேயிருக்கிறது என்கிறார் அரங்கநாதன் நம்பி. “பெயர் ஒரு வித்தைக்காரனின் தொப்பி. அதிலிருந்து வெளிவரும் எதுவும் உண்மையில்லை. அவை ஏதேதோ எண்ணங்களின் நோக்கங்களின் ஆரூடங்களின் திட்டங்களின் சித்திரவதைகளின் உருவகங்கள். அது வெறும் ஒரு சொல். சீஸேமைத் திறக்க வைக்கும் ஒரு கடவுச் சொல்.” காலச்சுவடு வெளியீடு விலை ; ரூ. 640

புத்தகம் புதிது 21ஊர்சுற்றி (நாவல்) யுவன் சந்திரசேகர்

யுவன் சந்திரசேகரின் ஏழாவது நாவல் ‘ஊர்சுற்றி’. அவரது நாவல்களின் வாசகனாக இந்த எல்லா நாவல்களிலும் ஓர் ஒற்றுமையைக் காண்கிறேன். எல்லா நாவல்களும் பயணத்தின் கதைகளே. ‘ஊர்சுற்றி’யும் இந்தப் பொது அம்சத்திலிருந்து மாறுபட்டதல்ல. ஒருவேளை மற்ற நாவல்களில் பயணம் முகாந்திரமாகவோ நிகழ்வாகவோ இடம்பெறும்போது ‘ஊர்சுற்றி’யில் அது சகல சாத்தியங்களுடனும் முன்நகர்கிறது. ஊர்சுற்றியான சீதாபதி மேற்கொள்ளும் யாத்திரை, இடங்களை மட்டும் சார்ந்ததல்ல. அது உறவுகளையும் சம்பவங்களையும் பின்புலங்களையும் ஊடுருவிச் செல்கிறது. மிக முக்கியமாகக் காலத்தினூடே சஞ்சரிக்கிறது. தொடக்கமும் முடிவும் இல்லாத சுவாரசியம் குறையாத சாகசம் கலையாத மானசீகப் பயணமாக நிலைகொள்கிறது. சுகுமாரன்

புத்தகம் புதிது: 20 பஷீர் நாவல்கள் தமிழில்: குளச்சல் மு. யூசப், சுகுமாரன்

வைக்கம் முகம்மது பஷீர் உலகை அதன் அனைத்துக் குறைகளோடும் நேசித்த அபூர்வமான கலைஞர்களுள் ஒருவர். தீமை, சிருஷ்டியின் இன்றியமையாத இயங்கு பகுதி என்ற அவரது புரிதலாலும் ஒதுக்கப்பட்டவர்களோடு குறிப்பாகக் கோமாளிகள், மடையர்கள், திருடர்கள், குற்றவாளிகள் என்று உலகம் கணிக்கும் மனிதர்களோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதாலும் இவ்வகையினரைத் தன்னுடைய மந்திர எழுத்தால் நாம் விரும்பும் பாத்திரங்களாக மாற்றி மலையாள இலக்கியத்தின் வரைபடத்தைப் பலபத்தாண்டுகளுக்கு முன்பே மாற்றி அமைக்க பஷீரால் முடிந்தது. முன்னுரையில்: கே. சச்சிதானந்தன் காலச்சுவடு வெளியீடு விலை: ரூ. 425

புத்தகம் புதிது 19 மரப்பசு (நாவல்) தி. ஜானகிராமன்

மரப்பசு எழுபதுகளின் தொடக்கத்தில் கணையாழி இதழில் வெளிவந்து 1975இல் நூல் வடிவம் பெற்றது. அன்று முதல் இன்று வரை நாற்பது ஆண்டுகளாக இலக்கிய உலகில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டும் வருகிறது - ஆதரவாகவும் எதிராகவும். தி. ஜானகராமன் நாவல்களில் மிக நவீனமான படைப்பு ‘மரப்பசு’. அவரது பிற நாவல்கள் கடந்தகாலத்தின் மறு உருவாக்கங்கள். ஆனால் நிகழ்காலத்தை நேர்முகமாக எதிரொளித்த படைப்பு ‘மரப்பசு’. பிற நாவல்கள் வாழ்வனுபவத்தின் மீதான படைப்புகள். அவற்றில் கருத்துக்கள் பின்புலமாகவே அமைந்தவை. மரப்பசு கருத்தை முன்னிறுத்தி வாழ்வை பாதித்த படைப்பு. இதில் அனுபவங்கள் கருத்துக்களை வலுப்படுத்துவதற்கான காரணிகளாகவே உருப்பெற்றிருப்பவை. உலகம் முழுவதும் பெண்ணியக் கருத்துகள் அலையடித்துக்கொண்டிருந்த தருணத்தில் அவற்றை தமிழில் விவாதித்த முதல் ஆக்கம் ‘மரப்பசு’. பூமியிலிருக்கும் சகல உயிர்களையும் அன்பின் கரங்களால் தழுவ விரும்பும் அம்மணி நவீன தமிழ் இலக்கியத்தில் மறக்க முடியாத பாத்திரங்களில் ஒன்று. அம்மணி மழைத் துளிபோல புதிதானவள். அதே சமயம் நதியைப் போல பழமையானவள். காற்றைப் போல் சுதந்திரமானவள். அதே சமயம் சிறகுகளின் பாதுகாப்பில் ஒடுங்க விரும்பியவள். உறவுகளைத் தேடி அலைந்தவள். அதே சமயம் தனிமையானவள். நாவலில் தன்னைப் பற்றி அம்மணி கூறும் சொற்களை மாற்றிச் சொன்னால் “மரப்பசுவாக இருந்தாலும் உயிருள்ள பசுவாக” இருக்கும் தனித்துவம் கொண்டவள். காலச்சுவடு வெளியீடு விலை ரூ. 230

புத்தகம் புதிது 18 கருக்கு (தமிழ் கிளாசிக் நாவல்) பாமா மின் நூல்

செவ்வியல் பண்புகளைக் கொண்ட ‘கருக்கு’ செவ்வியல் பதிப்பாக ஒவ்வொரு தசாப்தத்திலும் வெளிவர வேண்டும் என்றே நான் கருதுகிறேன். காரணம் நாம் சரித்திரத்தை வெகு வேகமாக மறப்பவர்கள். குறிப்பிட்டுச் சொன்னால் தலித்துகளின் வாழ்க்கைச் சரித்திரங்களையும், பெண்கள் வாழ்க்கைப் போராட்டங்களையும் மறப்பது நமக்கு எளிதாக இருக்கிறது. அப்படி எளிதாக்கிக்கொள்வது நமக்கு வசதியாக இருக்கிறது. மனத்தைக் குத்துபவைகளை அவை இல்லாதவை போல பாவனை செய்துகொண்டு இருப்பவர்களின் நிம்மதியான தூக்கத்தைக் கெடுக்க, அவர்களை முட்டி முட்டித் தொல்லை தர, அவர்களின் தடித்துப்போன தோல்களைக் கீறிவிட ‘கருக்கு’ தேவைப்படுகிறது. உருவகமாகவும் புத்தகமாகவும். காலச்சுவடு வெளியீடு ரூ. 100/-

புத்தகம் புதிது 17: தீ (தமிழ் கிளாசிக் நாவல்) எஸ். பொன்னுத்துரை மின் நூல்

தீக்குள் விரலை வைத்தால் இன்பம் தோன்றுமா? என்பதே, ‘தீ’யின் அடிப்படையான உசாவல். பல தடவைகளாக . . . வெவ்வேறான இடங்களில் . . . வித்தியாசமான பருவங்களில் . . . தீக்குள் விரலை வைக்கும் எத்தனங்களும், அவற்றுள் சிலவற்றில் ஏற்படும் தோல்வியும், சிலவற்றில் வெற்றி கொள்வதாக ஏற்படும் வீண் மயக்கமும், பின்னர் அவற்றின்பாலான விளைவுகள் தரும் வெம்மையிலும் பொசுங்கிப்போய்த் தறி கெட்டோடும் ஒரு மனிதனது கதையின் சில அத்தியாயங்களையே ‘தீ’ தொட்டுச் செல்கிறது. “தூரத்துப் பார்வைக்கு ஒளியாய், வெளிச்சமாய், அருகி வர அருகி வர வெப்பமாய், வெப்பம் அதிகரித்துச் சூடாகப் பரவும் நியதி“ என முந்தைய பதிப்பின் முன்னுரையில் இதை அழகாக விட்டல்ராவ் விபரிக்கின்றார். வாசகன் இவ்வாசகங்களுடன் ‘தீயாக எரிக்கும் நியதி’ எனவும் சேர்த்து வாசித்துக்கொள்கிறான். முன்னுரையில் றஞ்சகுமார் காலச்சுவடு வெளியீடு ரூ. 120/-

புத்தகம் புதிது 16: தலைமுறைகள் (தமிழ் கிளாசிக் நாவல்) நீல. பத்மநாபன் மின் நூல்

‘நாவல்’ என்பது நவீன இதிகாசம். வாழ்வை இதிகாசம் போல் சித்தரிப்பவனே உயர்ந்த படைப்பாளி. நீல. பத்மநாபனிடம் இந்த அம்சம் மேலோங்கியிருக்கிறது. வாசகனுக்கு இதிகாச உணர்வைத் தரும் நவீனத் தமிழ் நாவல்கள் வெகு சொற்பம். மகத்தான நாவலாசிரியர்களோடு வைக்கத் தகுந்தவர் நீல. பத்மநாபன். ‘தலைமுறைகள்’ ஒரு நவீன இதிகாசம். காலச்சுவடு வெளியீடு ரூ. 325/-

புத்தகம் புதிது 15: அம்மா வந்தாள் (தமிழ் கிளாசிக் நாவல்) தி. ஜானகிராமன் மின் நூல்

‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை. இந்த இரண்டு கருத்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்க்கை இருக்கிறது; இருக்கும் என்பதை வலியுறுத்துகிறது கதை. இவ்விரு நிலைகளில் ஊசலாடுபவர் களாகவே முதன்மைப் பாத்திரங்கள் அமைகின்றன. இந்த ஊசலாட்டத்தை கலையாக்குகிறார் தி. ஜானகிராமன். ஆசாரங்களையும் விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுகள்தாம் என்பதை இயல்பாகச் சொல்வதுதான் அவருடைய கலைநோக்கு. அந்த நோக்கம் உச்சமாக மிளிரும் படைப்புகளில் முதலிடம் வகிப்பது ‘அம்மா வந்தாள்’. காலச்சுவடு வெளியீடு விலை: ரூ. 170/-

புத்தகம் புதிது; காகித மலர்கள் (தமிழ் கிளாசிக் நாவல்) ஆதவன் மின் நூல்

சூழலியல் சார்ந்த அக்கறைகள், தில்லி அரசியலின் குறுக்குவெட்டுப் பார்வை, பெருநகரத்து மனிதர்களின் உள்ளீடற்ற போலியான வாழ்க்கை, புதிய அரசியல் மற்றும் சமூக இயக்கங்களின் மீது நடுத்தர வர்க்கத்து மனிதர்கள் கொள்ளும் எதிர்பார்ப்பு, ஏதோ ஒரு வகையில் எளிமையான தின் மீதும் இயல்பானதின் மீதும் ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் பற்றுறுதியும் அது தரும் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையுமே ‘காகித மலர்கள்’ நமக்கு அளிக்கும் சித்திரம். இந்தச் சித்திரமே இந்த நாவலை இன்றைய சூழலில் அவசியம் வாசிக்க வேண்டிய படைப்பாக்குகிறது. காலச்சுவடு வெளியீடு ரூ. 350/-

புத்தகம் புதிது ; காதுகள் (தமிழ் கிளாசிக் நாவல்) எம்.வி. வெங்கட்ராம் (மின்னூல்0

எம்.வி.வி. தன் வாழ்க்கையின் சுமார் 20 ஆண்டுகால அனுபவத்தைக் ‘காதுகள்’ என்ற பெயரில் எழுதினார். இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன. அவர் உடல் ஒரு குருக்ஷேத்ரமாக வடிவமைக்கப்படுகிறது. இரண்டு அணியினர் போரிடுகிறார்கள். அவர் தெய்வத்தைச் சார்ந்து நிற்கிறார். நன்மைக்கும் தீமைக்குமான போரில், தெய்வம்கூடச் சுலபமாக ஜெயிக்க முடிவதில்லை. ஆனாலும் தன் குரு, அந்தக் கெட்டவைகளை வெற்றி கொள்வார் என்று நம்புகிறார் மகாலிங்கம். அந்த நம்பிக்கைதான் நாவலின் பக்கங்கள். இதை எம்.வி.வி. தன் வாழ்க்கை வரலாற்று நாவல் என்கிறார். விமர்சகர்கள் சிலர் இது மேஜிக்கல் ரியலிச நாவல் என்கிறார்கள். மனநல மருத்துவக் காரர்கள் இது ஒரு ஆடிட்ரி ஹாலுயூசினேஷன் சார்ந்த நாவல் என்கிறார்கள். தமிழ் நாவல் சரிதத்தில இது ஒரு முக்கியமான, வாசிக்கப் பட வேண்டிய நாவல் என்பது ஒரு நிச்சயமான உண்மை. பிரபஞ்சன் காலச்சுவடு வெளியீடு விலை : ரூ. 225/-

புத்தகம் புதிது -13 ; மானசரோவர் (தமிழ் கிளாசிக் நாவல்) அசோகமித்திரன் (மின்னூல்)

பகுத்தறிவின் எல்லையை உணர்வதிலும் உணர்த்துவதிலும் முக்கியப் பங்கு வகிப்பது ‘மானசரோவர்’ நாவலின் முக்கியமான பரிமாணம் என்று சொல்ல வேண்டும். நவீனத்துவத்தின் ஆதாரமான அறிவியல் பார்வையின் எல்லைகளை, போதாமையைத் தெளிவாகவே கோடிகாட்டும் நாவல், விளங்கிக்கொள்ள முடியாத வாழ்வின் புதிர்களுக்கான பதில்களையும் நெருக்கடிகளுக்கான தீர்வுகளையும் பகுத்தறிவின் எல்லைக்கு அப்பாற்பட்டுத் தேடிச் செல்கிறது. பகுத்தறிவின் எல்லைக்கு வெளியே அது தீர்வையும் காண்கிறது. ஆனால் எல்லாருக்குமான தீர்வாக முன்வைக்காமல் அகவயமான அனுபவமாக, ஒரு சாத்தியமாக அதை அடையாளம் காட்டுகிறது. இந்தவகையில் இது அசோகமித்திரன் நாவல்களில் தனித்த இடத்தைப் பெறுகிறது. நாவலின் இந்தப் புள்ளி மேலும் விரிவாக விவாதிக்க வேண்டிய அவசியத்தையும் ஏற்படுத்துகிறது. அரவிந்தன் காலச்சுவடு வெளியீடு விலை: ரூ. 190/-

புத்தகம் புதிது -12 வெண்ணிறக் கோட்டை (உலக கிளாசிக் நாவல்) ஓரான் பாமுக் தமிழில்: ஜி. குப்புசாமி

ஓரான் பாமுக்கின் ஆரம்ப கால நாவல்களில் ஒன்று ‘வெண்ணிறக் கோட்டை’. துருக்கியரல்லாத அயல்மொழி வாசகர்கள் இந்த நாவல் மூலமே முதலில் அவரை அறிந்துகொண்டனர். பாமுக்கின் இலக்கிய அறிமுகத்தை அமெரிக்க எழுத்தாளர் ஜே. பரினி ‘கிழக்கிலிருந்து ஒரு புதிய நட்சத்திரத்தின் உதயம்’ என்று குறிப்பிட்டார். ஆங்கிலத்தில் வெளியான ‘வெண்ணிறக் கோட்டை’யை முன்வைத்து அவரை ஜார்ஜ் லூயிஸ் போர்ஹேவுக்கும் இதாலோ கால்வினோவுக்கும் நிகரானவராக மதித்தார். ஆனால் தனது படைப்பாக்கத்தில் மூளையை இதயமாக மாற்றும் விந்தைக் கலைஞர் ஓரான் பாமுக். ‘வெண்ணிறக் கோட்டை’யின் கதை சிக்கலானது; அறிவுப்பூர்வமானது. ஆனால் உணர்வின் பெரும் ததும்பல் கொண்டது. பதினேழாம் நூற்றாண்டின் இஸ்தான்புல் நகரத்தைப் பின்புலமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை. ஒரு மனிதனின் இருமை பற்றிய குழப்பங்களும் தெளிவுகளுமே கதையாடல். தனக்குள் இருக்கும் பிறத்தியானை அல்லது பிறனுக்குள் இருக்கும் தன்னை ஒரு மனிதன் எதிர்கொள்வதே நாவலின் மைய இழை. ஒருவகையில் இது இரண்டு மனித இயல்புகளின் கதை. இன்னொரு வகையில் மேற்குக்கும் கிழக்குக்கும் இடையில் அகப்பட்டுத் தனி அடையாளத்துக்காகத் திணறும் துருக்கியின் வரலாறு. மூன்றாம் வகையில் ஓரான் பாமுக் தனது பிற்காலக் கதைகளில் விரிவுபடுத்திய சுய அடையாளக் குழப்பம் சார்ந்த தன்வரலாறு. ஜி. குப்புசாமியின் மொழிபெயர்ப்புகள் விரிவான வாசக கவனத்துக்கும் சரியான அங்கீகாரத்துக்கும் உள்ளானவை. ஓரான் பாமுக்கின் படைப்புகளைத் தொடர்ந்து மொழியாக்கம் செய்துவரும் ஜி. குப்புசாமி, இந்த மொழிபெயர்ப்பில் மூலஆசிரியரின் நிழல் பங்காளியாகத் தன்னை நிறுவுகிறார்; நம்பகமான விதத்தில். காலச்சுவடு வெளியீடு விலை: ரூ. 165/-

புத்தகம் புதிது -11: பொம்மை அறை (உலக கிளாசிக் நாவல்) லோரன்ஸ் வில்லலோங்கா தமிழில்: யுவன் சந்திரசேகர் (மின்னூல்)

நாவலின் மையமாய் இருப்பவை மூன்று புள்ளிகள். அறிவின் துணைகொண்டு, இறையியலின் இடைவெளிகளை நிரப்ப முற்படும் ஸென்யோர். அவருக்கு எதிர்முனையில், முழுமையான கடவுள் நம்பிக்கை கொண்ட அவரது மனைவி. இருவருக்குமிடையில் சேவகனாக, செயலாளனாக, பாதிரியாக, வளர்ப்பு மகனாக இருந்து அல்லாடும் கதைசொல்லி ஜோன் மயோல். கடனில் மூழ்கிக்கொண்டிருக்கும் எஸ்டேட்டுடைய சொத்து நிர்வாகத்தில், அதன் பணவிவகாரங்களை முறைப்படுத்துவதில் மட்டுமல்ல அவனுடைய அல்லாட்டம்; சதை இச்சைக்கும் ஆன்மாவுக்குமான போராட்டத்தில் ஸென்யோர் எடுக்கும் நிலைப்பாடுகள் தொடர்பாகவும்தான். அவருடைய செயல்பாடுகள்மீது இவனுக்கு ஏற்படும் விமர்சனங்கள் அத்தனையுமே, தான் ஒரு பாதிரியாக இருக்கிறோம் என்ற போதம் காரணமாகவே வெளிப்படுகிறவை. வில்லலோங்கா எழுதிச் செல்லும் பாணி அலாதியானது. கதை சொல்லும் போக்கிலேயே நாவலின் நடப்புக் காலத்திய ஓவியம், இசை, இலக்கியம் எனப் பல்வேறு கலைவடிவங்கள் குறித்து வெளிப்படையான விவாதங்களும் இடம்பெறுகின்றன. வாக்னர் பற்றியும் மொஸார்ட் பற்றியும் டச்சு குறுஓவியங்கள் பற்றியும் திறந்த விசாரணையும் விமர்சனங்களும் வெளியாகின்றன. விக்டர் ஹ்யூகோ, அலெக்ஸாண்டர் ட்யூமா என்று சமகால, முந்தையகால எழுத்தாளர்கள் பற்றிய கருத்துக்களும் பதிவாகின்றன. தமிழ்ச்சூழலில் ஜெயகாந்தனையும் தி. ஜானகிராமனையும் லா.ச.ராவையும் ஜி. நாகராஜனையும் அவர்களின் நேரடிப் பெயர்களுடன், படைப்புகளுடன் ஒப்பிட்டுப் பேசுகிற ஒரு நாவல் எழுதப்பட்டிருக்கிறதா என்ன! காலச்சுவடு வெளியீடு விலை : ரூ. 295/-

புத்தகம் புதிது -9 ; எனது சிறிய யுத்தம் (உலக கிளாசிக் நாவல்) லூயிஸ் பால் பூன் தமிழில்: பெர்னார்ட் சந்திரா (மின்னூல்)

மிகக் குறைவாகவே விவரித்து வாசகரை வெகு ஆழமாக யோசிக்க வைக்கும் படைப்பு இந்நூல். படைப்பின் கருப்பொருளுக்கும் படைப்பாளியின் மனநிலைக்கும் தோதான குழப்பமான மொழி நடையில் வாசகரைச் சிக்கெனப் பிடிக்கும் புதினம் இது. மனம் என்னும் பூதக் கண்ணாடியால் கூர்ந்து நோக்கினால் மட்டுமே போரினால் விளையும் அபத்தங்களையும் அவலங்களையும் அவதானிக்க இயலும் என்பதை உணர வைக்கும் நூல் இது. தானே யுத்தத்தில் படைவீரனாக இணைந்து, போர்க் கைதியாகப் பிடிபட்டு, விடுவிக்கப்பட்டு, பின் சராசரி மனிதனின் பார்வையில், யுத்தத்தின் போக்கையும் மக்களின் செயல்பாடுகளையும் மன ஓட்டங்களையும் தனக்கே உரிய தனித்துவமான யதார்த்த எள்ளலுடன் லூயிஸ் பால் பூன் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். ஒரு பத்திரிகையாளரின் புகைப்படக் கருவிபோல் வேறுபட்ட மனிதர்களைப் படம்பிடித்து தனது செறிவான எழுத்து நடையால் அப்படங்களின் எல்லைகளைப் பன்மடங்கு பெருக்கி ஆழமும் விரிவுமான பரிமாணங்களை வாசக மனத்துக்குக் காட்சிப்படுத்துகிறார். மனிதநேயமும் தார்மீக ஆவேசமும் மனித மன விநோதங்கள் மீதான நையாண்டியும் இவரது எழுத்தின் பலம். காலச்ச்சுவடு வெளியீடு விலை ரூ 100

புத்தகம் புதிது -8 காதல் கடிதம் (இந்திய கிளாசிக் நாவல்) வைக்கம் முகம்மது பஷீர் மலையாளத்திலிருந்து தமிழில்: சுகுமாரன்

வைக்கம் முகம்மது பஷீரின் அச்சில் வெளியான முதல் நாவல் ‘காதல் கடிதம்’. 1943 இல் வெளியானது. ஒரு ‘தமாஷான கதை’ என்று எழுதியவரே குறிப்பிட்டாலும் இது வேடிக்கையான கதை மட்டுமல்ல. எழுதப்பட்ட காலத்தின் சமூகப் பழக்கத்தை எள்ளி நகையாடவும் காதலின் சிக்கலைப் பேசவும் காதலர்களின் சாதுரியங்களைப் பேசவும் செய்கிறது. பிற்காலத்தில் பஷீர் எழுதிய படைப்புகளின் ஆதார குணங்கள் இந்தத் தொடக்க கால நாவலிலேயே புலப்படுகின்றன. அநாயாசமாகச் செல்லும் கதையாடல், தனித்துவமான மொழி, கதாபாத்திரச் சித்தரிப்பில் மறைந்திருக்கும் நுட்பம் ஆகிய இயல்புகள் இந்தப் புனைவை முக்கியமானதாக்குகின்றன. எழுதப்பட்டு முக்கால் நூற்றாண்டுக் காலத்துக்குப் பின்பும் வாசிப்புக்கு உகந்ததாகவும் காலத்துக்குப் பொருந்தியதாகவும் இந்த நாவல் நிலைபெற்றிருப்பது பஷீரின் மேதைமையால் மட்டுமே. காலம் பஷீரைக் கடந்து செல்லவில்லை. மாறாக பஷீர் காலத்தைத் தாண்டிச் செல்கிறார் என்பதை ‘காதல் கடிதம்’ உறுதிப்படுத்துகிறது காலச்சுவடு வெளீயீடு விலை.ரூ 75

புத்தகம் புதிது-7 புயலிலே ஒரு தோணி (தமிழ் கிளாசிக் நாவல்) ப. சிங்காரம்

புயலிலே ஒரு தோணி (தமிழ் கிளாசிக் நாவல்) ப. சிங்காரம் ரூ. 275 ப. சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ நாவல் நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் இரண்டு நிலையில் முன்னோடித்தன்மைகள் கொண்டது. ஓர் இலக்கிய ஆளுமையாக ஒருபோதும் தன்னை காட்டிக்கொண்டிராத ஒருவர் எழுதிய முன் உதாரணம் இல்லாத படைப்பு இந்த நாவல். வெளிவந்து பல ஆண்டுகள் வாசகர் கவனத்திற்கு வராமல் இருந்தும் இன்று தமிழ் செவ்வியல் படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. காரணம் அதன் படைப்பு வலு. ஒரு படைப்பு தனது கலைத் திட்பத்தின் மூலமே தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு. இது இலக்கியம் சார்ந்த முக்கியத்துவம். வரலாற்று அடிப்படையிலும் ‘புயலிலே ஒரு தோணி’ தனி இடத்தைப் பெறுகிறது. இரண்டாம் உலகப் போரின் பின்னணியையும் போர்க்கள அனுபவங்களையும் துல்லியமாகவும் நம்பகமாகவும் சித்தரித்த நாவல் இது மட்டுமே. காலச்சுவடு வெளியீடு ரூ 275

புத்தகம் புதிது -6 புத்ர (தமிழ் கிளாசிக் நாவல்) லா.ச. ராமாமிருதம்

கவிதைக்குரிய நுட்பங்களுடன் தன் மொழியை வாழ்க்கையின் மீது கவியச் செய்கிறார் லா.ச. ராமாமிருதம். சம்பவங்களின் தொகுப்பிலிருந்து ஓர் ஆழ்ந்த அக உலகத்தைச் சிருஷ்டிக்கிறார். ஆழ்மனத்தின் குரலை ஓர் அசரீரியைப் போல் ஒலிக்கச்செய்ய லா.ச.ரா. கவிமொழியைத்தான் தேர்ந்தெடுக்கிறார். யதார்த்த நடையும் கவித்துவமும் சிருஷ்டித்த குழந்தை ‘புத்ர’ எனலாம். நூறு ஆண்டுகளாகத் தொடரும் சாபம்தான் நாவலின் மையம். ‘புத்ர’ ஒரு வகையில் அவரது முன்னோர்களின் சரித்திரம் எனலாம். கதை சொல்வது மட்டும் அவரது லட்சியமல்ல. மனித மனத்தின் கோபங்களை, தாபங்களை, சஞ்சலங்களை இடையறாது தொடரும் இயக்கத்தின் பிம்பம் என நிறுவ முயல்கிறார். வெளிவந்து ஐம்பது ஆண்டுகளைக் கடந்துவிட்ட ‘புத்ர’ தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. காலச்சுவடு வெளியீடு விலை; ரூ 150

புத்தகம் புதிது -5 முன்கூறப்பட்ட சாவின் சரித்திரம் (உலக கிளாசிக் நாவல்) காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் தமிழில்: அருமை செல்வம், அசதா

விதி மையப் பார்வை ‘முன்கூறப்பட்ட சாவின் சரித்திரம்’ நாவலின் மையப்பண்பாக இயங்கியிருக்கிறது. விதியில் நம்பிக்கையற்றவர்கள் இந்தக் கதையில் நிகழும் தொடர் தற்செயல்களின் ஒழுங்கை அவதானிக்கலாம். ஆங்கெலா விகாரியோவின் கன்னித்தன்மை இழப்பிற்கு உண்மையில் சந்தியாகோ நாஸார்தான் காரணமென்று நாவலில் எங்குமே நிறுவப்படாமல் விட்டிருப்பதன் மூலம் வாழ்வின் அபத்த அவலம் சுட்டப்படுகிறது. சந்தியாகோ நாஸாரின் கொலையைத் தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் எப்படி தற்செயல் சம்பவங்களின் மூலம் நிறைவேறாமல் போகின்றன என்பதை மார்க்கேஸின் பிரமாதமான விவரிப்பு விளக்குகிறது. பத்திரிகையாளனின் ஆகச்சிறந்த ஆற்றலான செய்தியை வழங்கும் உத்தியில் புனைவாக்கப்பட்டிருக்கிறது இந்நாவல். -குணா கந்தசாமி வெலியீடு காலச் சுவடு விலை; ரூ 100

புத்தகம் புதிது -4 :: இந்த நதி நனைவதற்கல்ல :: தமயந்தி

சரிகா ஷா, சோனா சோரி, அருணா ஷான்பாக் போன்ற பெண்களை நாம் இதுவரை சந்தித்திருக்கலாம். இல்லாதும் இருக்கலாம். அவர்கள் எந்தவிதத்தில் நம் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள் என்றால் ஒன்றுமில்லைதான். இப்படியான சாதாரணப் பெண்களையும், அவர்களுக்குக் குடும்பத்திற்குள்ளும் வெளியும் இழைக்கப்படும் அநீதிகளையும் மிகச் சாதாரணமாகவே நாம் கடந்து செல்கிறோம். இவர்களுக்கிழைக்கப்பட்ட அநீதிகளைைப் பதிவு செய்வதற்கான அவசியம், இப்புத்தகத்திற்கு 'முன்னுரை' எழுத மறுக்கப்பட்ட புள்ளியில் முக்கியத்துவம் பெறுகிறது

புத்தகம் புதிது -3 கூடுதலாய் ஒரு நுழைவுச் சீட்டு :: யாழிசை மணிவண்ணன்

பார்க்கப்படாதவற்றைப் பார்ப்பதும் எழுதப்படாதவற்றை எழுதி உலகிற்கு உயர்த்திக் காட்டுவதும்தான் உண்மையான கலையின் நிஜமுகம் என்பதை உணர்ந்தவராக, கவிதைத் தொழில்நுட்பங்களையெல்லாம் உதறிவிட்டு, உயிர்நுட்பத்தை மட்டும் நம்பித் துணிச்சலோடு எழுதப்பட்டதால் நிரப்பப்படாத வெற்றிடம் நோக்கி நகரும் ஜீவனுள்ள காற்றாக அமைந்திருக்கின்றன இவரது ஒவ்வொரு கவிதைகளும். -கவிஞர் வைகறை

புத்தகம் புதிது -2 கங்கைக்கரை ரகசியங்கள் :: ரமணன்

கங்கையின் புனிதத்தை, காசியின் பெருமையைத் தெளிவாக எடுத்துச் சொல்லும் வசீகரிக்கும் வார்த்தைகள் பக்குவப்பட்ட நடை நாமும் அவருடன் பயணிக்கும் உணர்வு கவிதா பதிப்பகம் வெளியீடு

புத்தகம் புதிது -1 கடைச்சங்கத்தில் கொங்கு கலாச்சாரம் :: பவள சங்கரி

வடகிழக்கு ஆசியாவில், ஆசிய கண்டத்தின் தென் திசையில் , மிகத்தொலைவில் அதாவது பல்லாயிரக்கணக்கான மைல்கள் தள்ளியிருக்கும் நம் இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியில் இருக்கும், மலைகள், ஆறுகள், பெருங்கடல்கள் என அனைத்தையும் தாண்டியிருக்கும் மற்றொரு தீபகற்பமான, காலை அமைதியான நாடு [The land of Morning Calm] என்று அழைக்கப்படுகிற தென்கொரிய நாட்டிலும் நம் தமிழ் மொழி குடிபெயர்ந்தது எங்கனம்? தோற்றம், நிறம் என அனைத்திலும் நம் தமிழ் நாட்டு மக்களிலிருந்து பெரும் வேறுபாடு கொண்டவர்களாக இருக்கும் தென் கொரிய நாட்டு மக்கள், அப்பா, அம்மா என்பது போன்ற நம் மொழியின் வேர்ச் சொற்களில் ஆரம்பித்து 4000 சொற்களுக்கும் மேல் நம் தமிழ் மொழி சொற்களை அவர்களுடைய ‘ஹங்குல்’ என்ற கொரிய மொழியுடன், மொழி கலப்பு செய்தது எப்படி சாத்தியமானது. இந்தக் கேள்விகள்தான் இந்த ஆய்வுகளின் அடிநாதமாக இருக்கிறது. தொடர்புக்கு; coraled@gmail.com

வாசகர் பணியில் திசைகள்:

வாசகர் பணியில் திசைகள்: வாசகர்களுக்கு (குறிப்பாக அயலக வாசகர்களுக்கு) புதிதாக வெளியாகும் நூல்களை (அச்சு நூல்கள், மின்னூல்கள் இரண்டுமே) அறிமுகப்படுத்த விரும்புகிறவர்கள் நூல்கள் குறித்த சிறு குறிப்புகளை editor@thisaigal.in என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நூல் வெளியீட்டு விழாப் படங்களையும், உரைகளையும் அனுப்பலாம் அவை திசைகள் தளத்தில் படைப்பாளிகள் கட்டணமின்றி வெளியிடப்படும் திசைகள் : வான் வழியே ஒரு வாசகசாலை

திசைகள் முயற்சியை வரவேற்கும் பதிவுகள்

மின்னூல்கள் பற்றிய எழுத்தாளர் மாலனின் கூற்றும், அது பற்றிய சில எண்ணங்களும்.... அண்மையில் சென்னையிலேற்பட்ட வெள்ளத்தால் நூல்கள் பல அழிந்துபோனதைப்பற்றிக்குறிப்பிடும் எழுத்தாளர் மாலன் மின்னூல்களின் முக்கியத்துவத்தைப்பற்றியும் குறிப்பிட்டிருக்கின்றார் தனது முகநூல் பதிவொன்றில். அதில் அவர் கூறியுள்ள இன்னுமொரு விடயமும் என்னைக் கவர்ந்தது. சின்னஞ்சிறு நாடான சிங்கப்பூர் கடந்த ஐம்பது ஆண்டுகளாக அச்சில் வெளிவந்த அனைத்து நூல்களையும் மின்னூலாகப்பதிப்பித்து விட்டது என்பதுதான் அது. உண்மையில் சிங்கப்பூர் நவீனத்தொழில் நுட்பத்தை எவ்வளவு திறமையாக , உடனுக்குடன் பாவிக்கத்தொடங்கி விடுகின்றது என்பதற்கு சிங்கப்பூரின் தேசிய நூலக இணையத்தளத்தைப்பார்த்தால் புரியும். மாலன் கூறியது போல், சிங்கப்பூர் செய்தது போல், ஏனைய நாடுகளும் இதுவரை அச்சில் வெளியான அனைத்து நூல்களையும் மின்னூல்களாக பதிப்பிப்பது பல்வேறு காரணங்களுக்காக நன்மை பயக்குமென்றே எண்ணுகின்றேன். அவற்றில் முக்கியமான சிலவாகக் கீழ்வருவனவற்றைக்குறிப்பிடலாம்" 1. இயற்கை அழிவுகள் மூலம் அச்சு நூல்கள் அழியும் அபாயமுண்டு. ஆனால் மின்னூல்களை அவ்விதம் அழியாமல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வைத்திருக்கலாம். 2. உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் எவராவது இணையத்தின் மூலம் அவற்றை எடுத்து வாசிப்பது இலகுவானதாகிவிடுகிறது. இது மின்னூல்களின் முக்கியமான பயன்களிலொன்று. 3. வெளிவந்த படைப்புகளை ஆவணப்படுத்த, அவற்றைப்பற்றிய விரிவான, சரியான, பூரணமான ஆய்வுகளைச்செய்ய மின்னூல்கள் வழி வகுக்கின்றன. பேராசிரியர்கள் சிலர் ஒரு சில படைப்புகளை மட்டும் படித்து விட்டு, தம் மேதா விலாசத்தைக் காட்டுவதுபோல் இனியும் காட்ட முடியாது. அதற்கு மின்னூல்கள் அனுமதிக்கப்போவதில்லை. 4. எழுத்தாளர்கள் அனைவருமே தம் படைப்புகளை நூல்களாகக்காணும் வசதியினை மின்னூல்கள் ஏற்படுத்தி, அவர்களது கனவுகள் நனவுகளாக வழி சமைக்கின்றன. 5. மிக இலகுவாக, வெளியான மின்னூல்களைச்சரி பிழை பார்க்க, திருத்தப்பட்ட மீள்பதிப்புகளை வெளியிட மின்னூல்கள் உதவுகின்றன. அச்சு நூல்களை இவ்விதம் இலகுவாக மீள்பதிப்புகளாக வெளியிட முடியுமா என்ன? இவ்விதமாக மின்னூல்களின் பயன்கள் பல. எழுத்தாளர் மாலனின் மின்னூல்கள் பற்றிய கூற்று, தீர்க்கதரிசனம் மிக்கதாகவும், காலத்துக்கேற்ற அவசியமாகவும் (குறிப்பாக சென்னை வெள்ளம் ஏற்படுத்திய அழிவுகளின் மத்தியில்) அமைந்திருக்கின்றது. ngiri2704@rogers.com நன்றி :பதிவுகள் மின்னிதழ்