தன் வயதில் பாதி கூட இல்லாத, இஸ்லாமியரல்லாத

பெண்ணைக் காதலித்து மணந்து கொண்டார் ஜின்னா. ஆனால்...


 ஜின்னாவின் மனைவி


கலப்புத் திருமணத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"

கண கணவென்று எரிந்து கொண்டிருந்த கணப்பில் கைகளைக் காண்பித்துச் சூடேற்றியவாறே கேள்வியை வீசினார் ஜின்னா. வீட்டுக்கு வெளியே மெல்ல மெல்லக் குளிர் டார்ஜிலிங் முழுக்கப் பரவிக் கொண்டிருந்தது. கொளுத்தும் பம்பாய் வெய்யிலிலிருந்து தப்பிக்க டார்ஜிலிங்கிலிருந்த நண்பர் தின்ஷா பங்களாவிற்கு வந்திருந்தார் ஜின்னா.

தின்ஷாவின் அப்பாதான் இந்தியாவில் முதன் முதலாக ஜவுளித் தொழிற்சாலையைத் துவங்கியவர்.  அவர் காலத்திலேயே மெல்ல மெல்ல வளர்ந்துடெக்ஸ்டைல் கிங் ஆகிவிட்டது அந்தக் குடும்பம். பம்பாயின் பணக்கார பார்சிக் குடும்பங்களில் ஒன்று சர் தின்ஷாவின் குடும்பம். ஜின்னாவின் நண்பர்களில் அவரும் ஒருவர். அவரது டார்ஜிலிங் பங்களாவில் தங்க வந்திருந்தார் ஜின்னா. அப்போது தின்ஷாவும் குடும்பமும் அந்த பங்களாவில் தங்கியிருந்தது.

குடும்பம் என்றால் ஏழெட்டுப் பேரில்லை. தின்ஷாவிற்கு ஒரே மகள். ரத்தன்பாய். செல்லமாக ருட்டி.

கணப்புக்குள் கட்டைகளை எடுத்துப் போட்டுக் கொண்டிருந்த தின்ஷா திரும்பிப் பார்த்தார். என்ன கேட்டீர்கள்?"

கலப்புத் திருமணத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்றார் ஜின்னா மீண்டும்.

வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதைத்தானே சொல்கிறீர்கள். வரவேற்கிறேன். மதச் சண்டைகள் குறைவதற்கு அதைவிடச் சிறந்த வழி வேறு என்ன இருக்கிறது?" என்றார் தின்ஷா.

ஜின்னா புன்னகைத்தார். முப்பது நொடிகள் தின்ஷாவின் முகத்தைக் கண் கொட்டாமல் பார்த்தார். பின் புன்னகை மாறாமல் கேட்டார்: உங்கள் மகள் ருட்டியை எனக்கு மணம் செய்து கொடுப்பீர்களா?"

தின்ஷா திடுக்கிட்டார்.

இந்தக் கேள்வியைக் கேட்டபோது ஜின்னாவிற்கு வயது 40. ருட்டிக்கு 16. ஜின்னா முஸ்லிம். ருட்டி பார்சி.

தின்ஷாவின் மனதில் கோபம் பொங்கியது. வெறும் அரட்டை என நினைத்து பொத்தம் பொதுவாக ஏதோ சொல்லி வைத்தால், தந்திரமாக அடி மடியிலேயே கை வைத்துவிட்டாரே ஜின்னா?. இந்தத் தந்திரங்களை இனி அனுமதிக்கப் போவதில்லை என அந்தக் கணத்தில் முடிவு செய்தார்.

ஜின்னா-தின்ஷா நட்பு முறிந்தது. ஆனால் ஜின்னா-ருட்டி காதல் வளர்ந்தது. ருட்டிக்கு காதல் கவிதைகளிலிருந்து அரசியல் வரை எத்தனையோ விஷயங்கள் பிடிக்கும். பிசினஸ் பிசினஸ் என்று பறக்கிற அப்பாவைப் பிடிக்காது. அவரது சர் பட்டத்தைப் பிடிக்காது. பிரிட்டிஷ்காரர்களுக்கு அவர் போடுகிற சலாம் பிடிக்காது. அப்போது நாடெங்கும் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த அன்னிபெசன்ட்டின் ஹோம் ரூல் இயக்கத்தின் பகிரங்க ஆதரவாளர் ருட்டி. ருட்டியின் எல்லாவித ரசனைகளுக்கும் ஈடு கொடுக்கிறவராக இருந்தார் ஜின்னா.

ஜின்னாவை சந்திக்கக் கூடாது என்று ருட்டிக்குத் தடை போட்டார் அப்பா. ருட்டிக்கு வயது 16தான், சட்டப்படி அவர்மேஜராகவில்லை என்பதால் சட்டப் புலியாக இருந்தும் கூட ஜின்னாவால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் நைசாக அவருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு ஜின்னாவை ரகசியமாக சந்தித்துக் கொண்டுதான் இருந்தார் ருட்டி.

பதினெட்டு வயது முடிந்து 2 மாதங்கள் ஆனதும் ஜின்னா வீட்டில் வைத்துத் திருமணம் நடந்தது.  கலப்புத் திருமணம் அல்ல. ருட்டி இப்போது மதம் மாறி  மரியமாகிவிட்டிருந்தார்.

மரியம் - ஜின்னா தம்பதி ஊரையே திரும்பிப் பார்க்கச் செய்பவர்களாக இருந்தார்கள். ஜின்னா அவருக்கென்று கச்சிதமாக லண்டனில் தைக்கப்பட்டு வந்த கோட்-சூட்தான் அணிவார். மரியம் மாணிக்கம், வைரம், வைடூரியம் பதிக்கப்பட்ட நெற்றிச் சுட்டி அணிவார். மரியம் கணவரைச் செல்லமாக, ‘ எனக் கூப்பிடுவார்.ஜின்னா என்ற ஆங்கிலச் சொல்லின் முதல் எழுத்து அது (அந்தக் காலத்தில் (1918) பெண்கள் கணவனைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவது அபூர்வம்).ஜின்னா மனைவியை மலரே என அழைப்பார்.

திருமணம் நடந்து நான்காண்டுகளுக்குள் ஜின்னா அரசியலில் பெரிய தலைவராகி விட்டார். நாட்டில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பிணக்குத் தீவிரமடையத் துவங்கியிருந்த நாட்கள் அவை. சமரசப் பேச்சுக்கள், கட்சியினருடன் கலந்தாலோசனை, பயணங்கள் என ஜின்னா படுபிசியாகிவிட்டார்.

ருட்டிக்கு ஏமாற்றம். காதல் கவிதைகள் கமழ்ந்த மனதோடு கல்யாண வாழ்வில் அடியெடுத்து வைத்த அவர் சிறிது நாளிலேயே தன் கணவர், அப்பாவைப் போலவே வேலையே முக்கியம் என மாறிப்போனதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்தார்.  22 வயது இளம் பெண்ணால் யதார்த்தங்களைப் புரிந்து கொள்ளவும் முடியவில்லை. ஏமாற்றங்களைத் தாங்கிக் கொள்ளவும் முடியவில்லை.

அப்பாவிடம் திரும்பிப் போக முடியவில்லை. என்றைக்கு அவர் வீட்டை விட்டு வெளியேறி ஜின்னாவைத் திருமணம் செய்து கொண்டாரோ அன்றே அவர் ருட்டியைத் தலைமுழுகி விட்டார். எனக்கு மகளே கிடையாது. அவள் என்றோ இறந்து போய்விட்டாள். இறந்து போய் விட்டாள் என்றா சொன்னேன். ஸாரி, அவள் தற்கொலை செய்து கொண்டு விட்டாள்" என்று ருட்டிக்குக் குழந்தை பிறந்த பிறகும் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஏமாற்றம் தாங்க முடியாமல் மூன்று வயதுக் குழந்தையாக இருந்த தன் மகளையும் அழைத்துக் கொண்டு லண்டனுக்குப் புறப்பட்டார். ஆனாலும் அவர் மனம் கணவனிடமே இருந்தது. அப்போது (செப்டம்பர் 1922) தங்கள் குடும்ப நண்பருக்கு எழுதிய கடிதத்தில்,  அவரை அவ்வப்போது பார்த்து வந்து எனக்குத் தகவல் சொல்லுங்கள். சாதாரணமாகவே நேரம் காலம் பார்க்காமல் வேலையில் மூழ்கிவிடுகிற மனுஷன் அவர். இப்போது தட்டிக் கேட்க நான் வேறு இல்லையா, இன்னும் அதிகமாக வேலையில் இறங்கிவிடுவார். பார்த்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்

மனம் இங்கிருக்கும்போது உடல் மட்டும் லண்டனில் இருக்குமா? சீக்கிரமே திரும்பி வந்தார். ஆனால் ஜின்னா முன்னைவிட பிசியாகிவிட்டார். போதும் போதாதற்கு பம்பாய் மாநிலத்தில் தேர்தல் வேறு வந்தது.

வெறுத்துப் போன ருட்டி ஆவி உலக ஆராய்ச்சிகளில் இறங்கினார். முற்போக்கு ஜின்னாவிற்கு இதெல்லாம்

சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றியது.

மேலைநாடுகளில் இருப்பதைப் போல இந்தியாவிலும் ஒரு ராணுவப் பயிற்சிக் கல்லூரி அமைக்கலாம் என எண்ணிய பிரிட்டிஷ் அரசு அதைப் பற்றி அறிக்கை கொடுக்க 1925ல் ஒரு கமிட்டியை அமைத்தது. ஜின்னாவும் அதில் ஓர் உறுப்பினர். அதற்காக ஐரோப்பாவிற்கும், அமெரிக்காவிற்கும் சுற்றுப் பயணம் கிளம்பினார் ஜின்னா. மனைவியையும் பயணத்தின்போது அழைத்துப் போனார். குடும்பத்திற்கு நேரமே கொடுப்பதில்லை என்ற மனைவியின் மனக்குறையைப் போக்கிவிடலாம் என நினைத்தார்.

ஆனால் பயணத்தின்போது விரிசல் அதிகமாயிற்று. 1927ல் இருவரும் பிரிந்து விட்டார்கள். முஸ்லிம் லீக் கட்சியின் தலைமையகம் பம்பாயிலிருந்து தில்லிக்கு மாறியது. ஜின்னா தில்லிக்குக் குடிபெயர்ந்தார். ருட்டி பம்பாயிலேயே தங்கிவிட்டார்.

ருட்டி தாஜ் ஹோட்டலில் நிரந்தரமாக அறை எடுத்துத் தங்கினார். நலிவடைந்த உடலும் தனிமையும் வாட்டியது. பேசுவதற்காக நண்பர்களைத் தேடிப் போவார். அதுவும் முடியாது போன ஒரு கட்டத்தில் செல்லப் பிராணிகளை வளர்க்கத் தொடங்கினார். முன்பு லண்டன் போனபோது எந்த நண்பரிடம் ஜின்னாவைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னாரோ அதே நண்பரை அழைத்து, நான் போன பிறகு என் பூனைகளைப் பார்த்துக் கொள்ளுங்கள்" எனச் சொல்லிவிட்டு 29 வயதில் இறந்து போனார்.

இறுதிச் சடங்குகளுக்கு ஜின்னா வந்தார். இறுகின கல் போல் உட்கார்ந்திருந்தார். நல்லடக்கம் செய்வதற்காக உடலைக் குழியில் இறக்கிவிட்டு அவரை மண்ணை வாரிக் குழியில் போடச் சொல்லிக் கேட்டார்கள். உடைந்து போய்க் கதறி அழுதார். உணர்ச்சிகளை அதிகம் வெளிக்காட்டாத மனிதர் என்று பெயர் பெற்ற ஜின்னா, வாழ்வில் அழுதது இரண்டே முறை. ஒன்று, ருட்டி இறந்த போது. மற்றொன்று, பாகிஸ்தானில் குடியேறுவதற்காக இந்தியாவை விட்டு வெளியேறியபோது இங்கேயே விட்டுச் செல்ல வேண்டி வந்த ருட்டியின் கல்லறையில்.

ஆனால் நினைவுகள் அவரை விட்டு நீங்கவில்லை. ருட்டியின் மரணத்திற்குப் பிறகு நடுராத்திரியில் எழுந்துகொண்டு வேலைக்காரர்களை எழுப்பி ருட்டியின் பெட்டியைக் கொண்டு வரச் சொல்லி அவருடைய உடைகளைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு நெடுநேரம் உறைந்து போய் சூனியத்தைப் பார்த்துக் கொண்டிருப்பார் என அவரது வேலையாட்கள் சொல்லியிருக்கிறார்கள்.

ருட்டியின் காதல் கடிதங்கள்  பிரசித்தமானவை. கவிதை மணம் வீசும் கடிதங்கள் அவை. ‘அன்பே என்னை நீ பறித்த பூவாக நினைத்துக் கொள்வாயா? நீ மிதித்த பூவாக அல்ல  லவ் யூ, லவ் யூ. நான் உன்னை இன்னும் கொஞ்சம் குறைவாக நேசித்திருந்தால் ஒரு வேளை உன்னுடனேயே தங்கியிருந்திருப்பேனோ என்னவோ?’ ‘நான் உன்னை

நேசிக்கிறேன் டார்லிங். உலகில் மிகச் சில மனிதர்களுக்கு மட்டுமே இத்தகைய காதல் கிடைக்கும்  நான் கேட்டுக் கொள்வதெல்லாம் இதுதான்: காதலில் துவங்கிய துயரம் காதலோடுதான் முடிய வேண்டும்  

ருட்டிக்குப் பிறகு ஜின்னா யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரது சகோதரி பாத்திமாதான் அவரையும் அவரது ஒரே மகள் தினாவையும் கவனித்துக் கொண்டார். தினா இளம் பெண்ணாக வளர்ந்த பின்பு நெவில் வாடியா என்ற ஒரு பார்சி கிறிஸ்தவரை மணந்து கொள்ள விரும்பியபோது ஜின்னா எதிர்ப்புத் தெரிவித்தார். ருட்டியின் தந்தையிடம்கலப்புத் திருமணம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டாரே அதே ஜின்னாதான்.

தினா, தான் விரும்பியவரை மணந்தார். தேசத் தந்தையாக ஜின்னா பாகிஸ்தானில் குடியேறிய போது அவரது மகள் பம்பாயிலேயே இருக்கத் தீர்மானித்தார். கடைசிவரை இந்தியராக அங்கேயே இருந்தார். ஜின்னா தன் அருமை மகளுக்கு அவ்வப்போது கடிதம் எழுதிக் கொண்டிருந்தார்.

ஆனால் தினா பதிலே போடவில்லை.