71

கண்களின் சிமிட்டல்

காமராவாய்

இதயத்துள் உன்

புகைப்படம்

அபாரமாய்.

 

72

திசையெங்கும்

இருள் திரைகள்

வைகறை வந்தது;

கம்பீரமாய்க்

கண்விழித்துப் பாய்கின்றன

கதிர்க் குதிரைகள்!

 

73

தாயின் கர்ப்பத்தைக்

கண்டு பிடிக்கும்

தணியாத ஆசையில்

தரையை இடிக்கும்

ஆலம் விழுதுகள்.

 

74

அழுக்கைத் தின்னும்

மீனைத் தின்னும்

கொக்கைத் தின்னும்

மனிதனைத் தின்னும் பசி

 

75

கனவு கண்டேன் நான்

கனவில் நன்றாய்த்

தூங்கக் கண்டேன் நான்.